TVK DMK VCK: தமிழக வெற்றிக் கழகத்தின் கேள்விகளை தொடர்ந்து, திமுகவை நோக்கி திருமாவளவன் கேள்வி எழுப்புவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தவெகவை கடுமையாக சாடும் விசிக:
திமுகவை அரசியல் எதிரியாக அறிவித்ததை தொடர்ந்து, விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தமிழக அரசியலில் தொடர்ந்து பேசுபொருளாகவே இருந்து வருகிறது. ஆட்சியில் பங்கு என மாநாட்டில் விஜய் நிகழ்த்திய உரையால், திமுகவில் உள்ள கூட்டணி கட்சிகள் விஜய் பக்கம் நகரலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பார்ப்புக்கு மாறாக திருமாவளவன் விஜயை கடுமையாக சாடினார். திமுகவை காட்டிலும் விசிகவினர் தான் முழு மூச்சாக விஜயை விமர்சித்து வந்தனர். அதேநேரம், விஜய் மற்றும் திருமாவளவனை ஒரே மேடையில் ஏற்ற, விசிகவின் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா முயற்சி செய்தார். ஆனால், அதுவும் தோல்வியிலேயே முடிந்தது.
திருமாவளவனை குறிவைக்கும் தவெக
தவெக செய்தி தொடர்பாளர் லோயோலா மணி பேசுகையில், “கொள்கை எதிரி பாஜக என்று கபட நாடகம் போடும் திமுக, ராஜ்நாத் சிங்கை அழைத்து விழா நடத்தியது மட்டுமில்லாமல் அந்த விழாவிற்கு கூட்டணி கட்சிகளை சார்ந்த தலைவர்கள் எல்லோரும் பல் இளித்து கொண்டு சென்றதை நாடறியும். அண்ணல் அம்பேத்கர் பேரனை விட ஐயா கருணாநிதி பேரன் பெரியவராகிட்டாரா? சகோதரி கனிமொழியை விடவா உதயநிதி ஸ்டாலின் கட்சிக்காக உழைத்து விட்டார். சகோதரி கனிமொழி அவர்கள் இல்லாமல் தூத்துக்குடிக்கு ஆய்வு செய்ய உதயநிதி சென்றாரே அதை பற்றி பேச உங்களுக்கு துணிச்சல் இருக்கா? கூட்டணி கட்சிகளின் எம்எல்ஏ பெயரை அரசு விழாக்களுக்கான அழைப்பிதழிக்ல் போடுவதில்லை என்று மிகவும் வேதனையோடு ஆளூர் ஷாநவாஸ் பேசினாரே நினைவு இருக்கிறதா? அதைப் பற்றி ஏன் பேச உங்களுக்கு வாய் வரவில்லை” என திமுகவை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார்.
மவுனம் கலைப்பாரா திருமா?
திமுக கூட்டணியில் இருந்தாலும், தவெக எழுப்பியுள்ளதை தாண்டியும் பல இக்கட்டான சூழல்களை விசிக எதிர்கொண்டு வருகிறது என்பதே உண்மை. திமுகவின் தவறுகளை காட்டமாக சுட்டிக் காட்டாதது, வேங்கை வாயல் சம்பவம் நிகழ்ந்து சுமார் 2 வருடங்கள் ஆகியும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாதது தொடர்பாக தீவிர நடவடிக்கைகள் எதுவும் எடுக்காதது என பல அதிருப்திகள் திருமாவளவன் மீது நிலவுகிறது. அதேநேரம், ஆளும் கட்சியின் கூட்டணியில் இருந்தாலும் எங்களது கம்பங்களில் கொடியை கூட ஏற்றமுடிவதில்லை என திருமாவளவனே வெளிப்படையாக ஆங்காங்கே பேசியுள்ளார். ஆட்சியில் பங்கு என்பது போன்ற விசிகவின் கருத்துகளை எல்லாம் திமுக கருத்தில் கூட கொள்வதில்லை என்பது தான், அமைச்சர் ஐ. பெரியசாமி போன்றோரின் கருத்தாக உள்ளது. இதன் மூலம் விசிக வளர்ச்சியை நோக்கி நகராமல், ஒரே இடத்தில் தேங்கி நிற்கிறது என்ற கருத்தும் பரவலாக உள்ளது. இதனால், கூட்டணி தர்மத்தை மட்டும் கருத்தில் கொள்ளாமல், கட்சியின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு, திருமாவளவன் திமுகவின் தவறுகளை சுட்டிக் காட்டுவாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இதையே தான், தவெகவும் கேள்வியாக முன்வைத்துள்ளது.
கனிமொழி அஸ்திரம்
திமுகவில் ஸ்டாலினின் வளர்ச்சிக்காக வைகோவை எப்படி கருணாநிதி ஓரங்கட்டினாரோ, அதே பாணியில் தான் உதயநிதியின் வளர்ச்சிக்காக தங்கை கனிமொழியை ஸ்டாலின் டெல்லி அரசியலுக்கு அனுப்பி ஓரங்கட்டியுள்ளார் என்ற குற்றச்சாட்டு பரவலாகவே உள்ளது. கட்சிக்காக பல ஆண்டுகளாக உழைத்து வரும் கனிமொழிக்கான உரிய அங்கீகாரம் திமுகவில் கொடுக்கப்படவில்லை என்பதே அவரது ஆதரவாளர்கள் ஆதங்கமும் கூட. அதேநேரம், அரசியக்கு வரவே மாட்டேன் என பேசிய உதயநிதி மூன்றரை ஆண்டுகளில் சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ - இளைஞர் நலன் அமைச்சர் - துணை முதலமைச்சர் என அதிவேகத்தில் தமிழக அரசியல் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளார். இந்த இரண்டு சூழல்களையும் ஒப்பிட்டு தான், திமுக ஒரு குடும்ப கட்சி மற்றும் கிட்சன் கேபினேட் தான் அந்த கட்சியை வழிநடத்துகிறது என்ற பிம்பத்தை மீண்டும் வலுவாக முன்னெடுக்க தமிழக வெற்றிக் கழகம் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் திட்டம்
தமிழக அரசியல் இன்றைய காலகட்டத்தில் கூட்டணி இன்றி வெற்றி பெறுவது என்பது சாத்தியமற்றது. திமுகவின் அடுத்தடுத்து வெற்றிக்கும் வலுவான கூட்டணியே பிரதான காரணமாகும். எனவே தான், 2026 தேர்தலுக்கு முன்பாகவே அந்த கூட்டணியை உடைத்து, தங்களுக்கான வலுவான கூட்டணியை கட்டமைப்பதே தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது. ஆட்சி அதிகாரத்தில் பங்கு என கூறியது மூலம், விசிக போன்ற கட்சிகளை தங்கள் பக்கம் இழுக்கலாம் என விஜய் கருதியிருந்தார். ஆனால், அந்த அறிவிப்பு எதிர்பார்த்த பலனை வழங்கவில்லை. இதன் விளைவாகவே கூட்டணி தர்மம் என கூறி, திமுகவின் தவறுகளை சுட்டிக் காட்ட மறுக்கும் விசிகவிற்கு நெருக்கடி தரும் பணிகளை தவெக தொடங்கியுள்ளது. ஒருவேளை இதன் மூலம், அரசுக்கு எதிராக திருமாவளவன் காத்திரமான கருத்துகளை முன்வைத்தால், 2026 தேர்தல் களத்தில் கூட்டணி கணக்குகள் தாறுமாறாக மாறவும் வாய்ப்புள்ளது.