நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு நிரந்தர விலக்கு கோரும் தீர்மானத்தை சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தாக்கல் செய்து, அது நிறைவேற்றப்பட்ட நிலையில், நீட் ரத்து தீர்மானம் குறித்து திமுக ஆ.ராசா பேசிய காட்சிகளை இன்று உங்கள் தொலைக்காட்சியில் வெளியிடுவீர்களா? அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், இது தொடர்பாக ஆ.ராசா பேசிய வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.


சட்டசபை கூட்டத்தொடரின் கடைசிநாளான இன்று நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவை நிறைவேற்றும் தீர்மானத்தை தமிழக அரசு நிறைவேற்றியது. அப்போது, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தனர்.


பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எடப்பாடி பழனிசாமி நீட் தேர்வு அச்சத்தால் சேலத்தில் மாணவர் தனுஷ் தற்கொலை செய்து கொண்டதற்கு தமிழக அரசுதான் பொறுப்பு என்று குற்றம் சாட்டினார். மேலும், அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது தி.மு.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா அ.தி.மு.க. அரசால் நீட் தேர்வுக்கு எதிராக சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை கண்டித்து பேசிய வீடியோவை காட்டி, தற்போது தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்டுள்ள நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை ஒப்பிட்டும் கேள்வி எழுப்பினார்.  


இந்தநிலையில்,  ‘நீட் ரத்து தீர்மானம் குறித்து திமுக ஆ.ராசா பேசிய காட்சிகளையோ, அல்லது ரகசியம் வைத்திருப்பதாக உதயநிதி கூறிய காட்சிகளையோ முழுமையாக இன்று உங்கள் தொலைக்காட்சியில் வெளியிடுவீர்களா? நீட் தீர்மானத்தில் உள்ள எதார்த்த நிலை குறித்து விவாதிப்பீர்களா?’ என அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது.


 






முன்னதாக, சேலம் மாவட்டம் கூழையுர் கிராமத்தை சேர்ந்த விவசாயி சிவக்குமார் என்பவரின் இரண்டாவது மகன் தனுஷ் (19). ஏற்கனவே இரண்டுமுறை நீட் தேர்வில் தோல்வி அடைந்த நிலையில், இம்முறையும் தோல்வி அடைந்துவிடுவோமோ என்ற அச்சத்தில் இருந்தார் எனக் கூறப்படுகிறது. இந்தநிலையில் தனுஷ், தனது வீட்டின் முற்றத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.




நீட் தேர்விற்கு இதற்கு முன்பு பல மாணவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், மாணவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் நீட் தேர்விற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வின் போது மாணவர்கள் தோல்வி அச்சத்தில் தற்கொலை செய்து வருகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர்ந்து தெரிவித்துவந்த நிலையில். இன்று மதியம் நடக்கவிருந்த நீட் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த கூழையுரை சேர்ந்த தனுஷ் என்னும் 19 வயது மாணவர் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற அச்சத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.இதனைத்தொடர்ந்து, மாணவரின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்த உதயநிதி, திமுக சார்பில் அவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கினார். மாணவர் தனுஷின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.