சென்னையில் வழக்கறிஞர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அ.தி.மு.க. நிர்வாகி இன்பதுரை, வி.சி.க. தலைவரும். எம்.பி.யுமான இன்பதுரை ஆகியோர் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் பேசிய இன்பதுரை திருமாவளவன் எந்த பக்கம் செல்வார் என்று தமிழ்நாடே காத்திருக்கிறது என்றும், அவர் நல்லவர்களோடு இருப்பார் என்றும், நம்மோடுதான் இருப்பார் என்றும் பேசினார்.
திருமா யார் பக்கம்?
அவரது பேச்சுக்கு பதிலளித்து மேடையில் பேசிய திருமாவளவன், "மக்களோடுதான் விசிக நிற்கும். இதுதான் நான் இன்பதுரைக்கு அளிக்கும் பதில். மக்கள் பிரச்சினை என்றால் மக்களுக்காக கட்சி அடையாளங்களை கடந்து விசிக நிற்கும். தேர்தல் அரசியல் என்பது வேறு. மக்கள் பிரச்சினை என்பது வேறு என்று பேசினார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 2026ம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில், தற்போது முதலே அரசியல் கட்சிகள் கூட்டணிக்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. வரும் சட்டமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் மிகவும் போட்டிகரமானதாக அமையும்.
அரசியலில் பெரும் பரபரப்பு:
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய பிறகு வரும் தேர்தலில் அவரது தாக்கம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தி.மு.க.வுடன் கூட்டணியில் உள்ள திருமாவளவனின் விசிக கட்சி வரும் தேர்தலில் வெற்றி பெறப்போவது யார்? என்பதை தீர்மானிப்பதில் முக்கிய அங்கம் வகிக்கும் கட்சியாக திகழ்கிறது. இதனால், விசிக- வை தங்கள் பக்கம் தக்க வைக்க தி.மு.க.வும், தங்கள் கூட்டணியில் இழுக்க மற்ற கட்சிகளும் கடும் போட்டி போட்டு வருகின்றனர்.
இந்த சூழலிலே, தி.மு.க. தலைவர்கள் இருக்கும் மேடையில் அ.தி.மு.க. நிர்வாகி இன்பதுரை கூட்டணிக்கு அழைப்பு விடுத்துள்ளார். திருமாவளவன் வெளிப்படையாக தி.மு.க.வுடன் கூட்டணியில் நீடிப்பேன் என்று கூறாமல், மக்களோடு இருப்பேன் என்று கூறியிருப்பதால் தி.மு.க தலைமையில் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருமாவை இழுக்க முயற்சி:
திருமாவளவன் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று நீண்ட நாட்கள் வலியுறுத்தி வருகிறார். அவரது கோரிக்கை குறித்து தி.மு.க. மூத்த தலைவரான ஆர்.எஸ்.பாரதி, கூட்டணி ஒப்பந்தத்தில் பேசவில்லை என்று கூறினார். அந்த சூழலில், நடிகர் விஜய் தன்னுடைய முதல் அரசியல் மாநாட்டிலே கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று அறிவித்தார். விஜய்யின் இந்த அறிவிப்பு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வரும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணியில் பெரும் மாற்றம் ஏற்படும் அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளனர். திருமாவளவன் தி.மு.க. கூட்டணியில் நீடிப்பேன் என்று கூறினாலும் வரும் சட்டமன்ற தேர்தலில் அவரை தங்கள் பக்கம் இழுக்க பல கட்சிகளும் தீவிரமாக முயற்சித்து வருகின்றனர்.