கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அமைந்துள்ள நடராஜர் கோயில் நிர்வாகத்தின் மீது பல்வேறு புகார்கள் இந்து சமய அறநிலையத்துறைக்கு வரப்பட்டன. இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை தருவதற்காக குழு ஒன்று அமைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இந்து சமய அறநிலையத் துறையின் இணை ஆணையர்கள் நடராஜ், லட்சுமணன், மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார், பெரம்பலூர் உதவி ஆணையர் அரவிந்தன், திருநெல்வேலி மண்டல தணிக்கை அலுவலர் ராஜேந்திரன் ஆகிய 5 பேர் கொண்ட குழுவினர் நேற்று சிதம்பரம் கோயிலுக்கு வந்தனர். அவர்களுடன் ஒருங்கிணைப்பாளராக கடலூர் துணை ஆணையர் ஜோதியும் நேற்று காலை 10 மணிக்கு கோயிலுக்குள் வந்தார்.
அவர்களுக்கு பாதுகாப்பாக கடலூர் மாவட்ட போலீஸ் கூடுதல் எஸ்பி அசோக்குமார், சிதம்பரம் டிஎஸ்பி ரமேஷ்ராஜ், சிதம்பரம் கோட்டாட்சியர் ரவி உள்ளிட்ட அதிகாரிகள் வந்தனர். கோயிலுக்கு வந்ததும் அதிகாரிகளை தீட்சிதர்கள் விபூதி பிரசாதம் கொடுத்து வரவேற்று அழைத்துச் சென்றனர். பின்னர் கோயில் கனகசபை மீது அவர்களை ஏற்றி சாமி தரிசனம் செய்து வைத்தனர். இதையடுத்து தாங்கள் கோயிலில் ஆய்வுக்கு வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அப்போது ஆய்வுக்கு தீட்சிதர்கள் ஆட்சேபனை தெரிவித்தனர். தீட்சிதர்களின் சார்பில் அவரது வழக்கறிஞர் சந்திரசேகர் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளிடம் பேசினார். அப்போது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. கோயிலில் அனைத்து வரவு செலவு கணக்குகளும் சரியாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. உச்சநீதிமன்றம் கோயில் நிர்வாகம் குறித்து தெளிவாக தீர்ப்பு அளித்துள்ளது ஆனால் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக இந்து சமய அறநிலைத்துறை குழு ஆய்வுக்கு வந்துள்ளதால் ஒத்துழைப்பு அளிக்க முடியாது. சட்டப்படி அமைக்கப்பட்ட குழு வந்தால் ஒத்துழைக்க தயாராக இருப்பதாக தெரிவித்தனர்.
இதையடுத்து கோயிலை விட்டு வெளியே வந்த அதிகாரிகள் குழு கோயில் வளாகத்தில் நின்றபடி ஆலோசனையில் ஈடுபட்டனர். மேலும் ஆயிரம்கால் மண்டபத்தில் அமர்ந்து இந்து சமய அறநிலையத் துறையிடம் உள்ள கோப்புகளை படித்துப் பார்த்தனர். தொடர்ந்து ஒருமணி இருந்து 4 மணி வரை கோயில் நடை பூட்டப்படும் என்பதால், அதிகாரிகள் உணவு இடைவேளைக்காக வெளியே சென்றனர். மீண்டும் ஆய்விற்காக மாலை 5 மணிக்கு மேல் வருகை தந்த இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளிடம் தீட்சிதர்கள் தரப்பு வழக்கறிஞர் சந்திரசேகர் காலையில் கூறிய பதிவான நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மேலும் உச்ச நீதிமன்றத்தில் அனுமதி பெற்று ஆய்வுக்கு வந்தால் மட்டுமே ஆய்வு ஒத்துழைப்பு தருவோம் என தெரிவித்தால் மீண்டும் ஆலோசனையில் ஈடுபட்ட அதிகாரிகள் நேற்று காலை முதல் இரவு வரை காத்திருந்து ஆய்வை மேற்கொள்ள முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர். மேலும் இரண்டு நாட்கள் கண்டிப்பாக ஆய்வு நடைபெறும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு நேற்று கூறி நிலையில் இன்று இரண்டாவது நாள் ஆய்வு நடைபெறுமா? அல்லது கோயில் பொது தீட்சிதர்கள் ஆய்வு ஒத்துழைப்பு வழங்கவில்லை என கடிதம் கொடுத்து விட்டு, அதிகாரிகள் அடுத்த கட்ட நடவடிக்களில் ஈடுபடுவார்களா என இன்று தெரியவரும். இதனால் இரண்டாவது நாளாக கோயிலில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.