Ponmudi Case: ஆளுநர் ஆர். என். ரவியின் நடவடிக்கையை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மனு, உச்சநீதிமன்றத்தில் இன்று அவசர வழக்காக விசாரிக்கப்படுகிறது.


உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை:


சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட, 3 ஆண்டுகள் சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தது. இதையடுத்து, பொன்முடிக்கு மீண்டும் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என ஆளுநருக்கு, முதலமைச்சர் பரிந்துரை செய்தார். ஆனால், தண்டனை மட்டுமே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், குற்றச்சாட்டுகள் இன்னும் தொடர்கின்றன என கூறி, பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க முடியாது என ஆளுநர் தரப்பு விளக்கமளித்தது. இந்த நடவடிக்கையை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. அந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஒப்புதல் அளித்தார். அதன்படி, ஆளுநர் ரவிக்கு எதிராக அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.


ஆளுநர் மீது தமிழக அரசு குற்றச்சாட்டு:


தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இணையாக ஆட்சி நடத்த ஆளுநர் முயற்சிக்கிறார். அரசியல் சாசனத்தில் 164 (1) பிரிவை ஆளுநர் ரவி அப்பட்டமாக மீறுகிறார். முதலமைச்சர் பரிந்துரைந்த பின்பும் பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் மறுத்து வருகிறார்.  உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி பொன்முடிக்கு எம்எல்ஏ பதவி மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு அமைச்சரவை பதவி வழங்க அரசு பரிந்துரைத்தும் ஆளுநர் அதை செயல்படுத்த மறுக்கிறார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை தொடர்பான முதலமைச்சரின் பரிந்துரையை ஆளுநரால் நிறுத்தி வைக்க முடியாது என்பதால், இந்த வழக்கின் தீர்ப்பு தமிழக அரசுக்கு சாதகமாகவே அமையும் என கூறப்படுகிறது. அப்படி நடந்தால், ஓரிரு நாட்களில் பொன்முடி மீண்டும் அமைச்சராவார் என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


தமிழக அரசு Vs ஆளுநர்:


தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என். ரவி பொறுப்பேற்றதில் இருந்தே, அவர் அரசுடன் மோதல் போக்கையே பின்பற்றி வருகிறார். பல்வேறு விவகாரங்களில் முரண்பட்டு செயல்படுவது, சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் இருப்பது போன்ற காட்சிகள் நீள்கின்றன. அதேநேரம், மத்திய அரசுக்கு சாதகமாக அவர் நடந்துகொள்வதாகவும், தமிழ்நாட்டின் சூழலுக்கு நேர் எதிராக ஆளுநர் பேசி வருவதாகவும் திமுக தரப்பு குற்றம்சாட்டி வருகிறது. சனாதனம் தொடர்பான பேச்சு, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி நீக்கம், சட்டமன்றத்தில் தனது உரையை புறக்கணித்தது, பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு என, ஆளுநர் ரவி தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருவது குறிப்பிடத்தக்கது.