விழுப்புரம் அருகே 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு
விழுப்புரம் அருகே உள்ள ராமையன்பாளையம் கிராமத்தை சேர்ந்த 10 வயதுடைய சிறுமி, அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் 5-ம் வகுப்பு படித்து வருகிறாள். இவள் சகாதேவன்பேட்டை பகுதியில் உள்ள ஒரு வாழைத்தோட்டம் அருகில் நடந்து சென்றாள். அப்போது அங்குள்ள ஒரு விவசாய நிலத்தில் ராமையன்பாளையத்தை சேர்ந்த முனுசாமி (73) என்பவர், புற்கள் அறுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அவர், அச்சிறுமியை அழைத்து புற்கட்டை தூக்கிவிட உதவி செய்யுமாறு கூறியுள்ளார். அதற்கு அச்சிறுமியும், வயதான தாத்தா என நினைத்து, அவருக்கு உதவி செய்யலாம் என்று நினைத்துக்கொண்டு புற்களைத் தூக்கி விட வந்துள்ளாள். அந்த சமயத்தில் அச்சிறுமியை முனுசாமி, பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார். மேலும் இதுபற்றி பெற்றோரிடம் சொன்னால் கொலை செய்து விடுவேன் என்றும் சிறுமியை முனுசாமி மிரட்டியுள்ளார்.
போக்சோ சட்டத்தில் முதியவர் கைது
உடனே அங்கிருந்து அழுதுகொண்டே வீட்டிற்கு வந்த சிறுமி, நடந்த சம்பவம் பற்றி தனது பெற்றோரிடம் கூறியுள்ளாள். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், இதுகுறித்து விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் முனுசாமி மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 10 வயது சிறுமிக்கு 73 வயது முதியவர் பாலியல் தொந்தரவு அளித்து சிறைக்கு சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.