ராமதாஸ் போட்ட ஒற்றை ட்வீட்.. ஆடிப்போன தமிழக அரசியல்.. ஒரு வேலை இருக்குமோ?

தவெக செயற்குழு கூட்டம் நடந்த அதே நாளில் ராமதாஸ் போட்ட ட்வீட் பல கேள்விகளை எழுப்புகிறது. இது, அரசியல் பதிவா அல்லது வேறு ஏதேனும் ஒன்றை உணர்த்த அவர் இப்படி ட்வீட் செய்திருக்கிறாரா என சந்தேகம் எழுந்துள்ளது.

Continues below advertisement

பாமக நிறுவனர் ராமதாஸ் போட்ட ஒற்றை ட்வீட் தமிழக அரசியலின் விவாதப் பொருளாக மாறியுள்ளது. அரசியல் பதிவா அல்லது வேறு ஏதேனும் ஒன்றை உணர்த்த அவர் இப்படி ட்வீட் செய்திருக்கிறாரா என பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது.

Continues below advertisement

பாமக போடும் பிளான் என்ன?

தமிழ்நாட்டின் வாக்கு அரசியலில் முக்கியமான இடத்தை பெற்றிருக்கும் கட்சி பாமக. வட மாவட்டங்களில் குறிப்பிடத்தகுந்த வாக்குகளை கொண்டுள்ளது. காஞ்சிபுரம், தருமபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது.

திமுக, அதிமுக என மாறி, மாறி கூட்டணி வைத்த பாமக, தற்போது பாஜக கூட்டணியில் உள்ளது. கடந்த 2019 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் அதிமுக - பாஜக - பாமக ஒரே கூட்டணியில் போட்டியிட்டது. ஆனால், இந்தாண்டு மக்களவை தேர்தலில் பாஜகவுடனான கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறினாலும், பாமக அதே கூட்டணியில் தொடர்ந்தது.

பாஜக கூட்டணியில் 10 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது. இப்படிப்பட்ட சூழலில், தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கான வேலையை அனைத்து கட்சிகளும் தொடங்கியுள்ளன.

ராமதாஸின் கூட்டணி கணக்கு?

இந்த நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட ட்வீட் ஒன்று தமிழக அரசியலின் விவாதப் பொருளாக மாறியுள்ளது. "பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையி னானே" என அவர் பதிவிட்டிருக்கிறார். 

எதை உணர்த்துவதற்காக அவர் இப்படி ஒரு ட்வீட்டை பதிவிட்டார் என்பது தெளிவாக தெரியவில்லை. ஆனால், தவெக செயற்குழு கூட்டம் நடந்த அதே நாளில் ராமதாஸ் போட்ட ட்வீட் பல கேள்விகளை எழுப்புகிறது. சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதற்கு முன்பு அதற்கான ஆய்வை திமுக அரசு நடத்த வேண்டும் என தவெக தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது.

இதைதான் பாமகவும் வலியுறுத்தி வருகிறது. இட ஒதுக்கீட்டை தாண்டி விகிதாச்சார அடிப்படையில் அனைத்து சமுதாயங்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தனது கொள்கையாக தவெக அறிவித்தது. பாமகவின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாக இது இருந்து வருகிறது.

இப்படியிருக்க, விஜயை வரவேற்கும் விதமாக ராமதாஸ் அந்த பதிவை வெளியிட்டுள்ளாரா சந்தேகம் எழுந்துள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகளாக உள்ள நிலையில், பாஜக கூட்டணியில் இருந்து விலகி தவெக கூட்டணியில் இணைய பாமக விரும்புவதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

 

Continues below advertisement