இஸ்லாமியர்கள் வாக்குகளை குறிவைக்கும் நோக்கில் தவெக செயற்குழு கூட்டத்தில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இஸ்லாமியர் உரிமை என்ற பெயரில் ஒரு தீர்மானமும் காயிதே மில்லத் பெயரில் அரசு விருது வழங்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
முஸ்லிம் வாக்குகளை குறிவைக்கும் விஜய்:
வருகிற 2026ஆம் ஆண்டு, தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், விஜய்யின் அரசியல் வருகை பெரும் எதிர்பார்ப்புகளை கிளப்பியுள்ளது. கட்சியின் முதல் மாநாட்டையும் முதல் செயற்குழு கூட்டத்தையும் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார் விஜய்.
மாநாட்டில் கொள்கைகளை அறிவித்த விஜய், செயற்குழு கூட்டத்தில் 26 தீர்மானங்களை நிறைவேற்றி கட்சிக்கான வியூகம் என்ன என்பதை சொல்லாமல் சொல்லி இருக்கிறார். இடஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பு, அரசு நல திட்டங்கள், இரு மொழி கொள்கை என திராவிட கட்சிகளின் பாதையையே விஜயும் தேர்வு செய்திருக்கிறார்.
அதேபோல, சிறுபான்மை நலன் என அதே பாணியை கையில் எடுத்துள்ளார் விஜய். 2026 தேர்தலில் இஸ்லாமியர்கள் வாக்குகளை குறிவைக்கும் நோக்கில் தவெக செயற்குழு கூட்டத்தில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
தீர்மானம் கூறுவது என்ன?
மத்தியில் பாஜக அரசு கொண்டு வந்துள்ள வக்ஃபு சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது தவெக. "நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசால் தாக்கல் செய்யப்பட்ட வக்ஃப் சட்டத் திருத்த மசோதா. இஸ்லாமிய சமூகத்தின் உரிமைகளைப் பறிப்பதாக இருக்கின்றது என்று கூறி எதிர்ப்புகள் எழுந்துள்ளன. கூட்டாட்சி அமைப்பிற்கு எதிரான தாக்குதலாக இருக்கின்ற வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று இச்செயற்குழு வலியுறுத்துகிறது" என தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல, காயிதே மில்லத் பெயரில் அரசு விருது வழங்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில், "தமிழ் மொழி சார்ந்தும் பண்பாடு சார்ந்தும் தலைவர்கள் மற்றும் தமிழ் முன்னோடிகளின் பெயரில் தமிழக அரசு சார்பில் பல்லாண்டுகளாக பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
ஆனால், கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்கள் பெயரில் எந்த விருதும் வழங்கப்படவில்லை. ஆகவே, இஸ்லாமிய சகோதரிகளின் தமிழ்த் தொண்டை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் இஸ்லாமிய சகோதரி ஒருவருக்கு அரசு சார்பில் கண்ணியமிகு காயிதே மில்லத் பெயரில் விருதும் பணமுடிப்பும் வழங்கப்பட வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு வலியுறுத்துகிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.