தமிழக பா.ஜ.க. பொதுச்செயலாளர் கே.டி.ராகவனின் ஆபாச வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் அறிக்கையும், அவர் பேசிய ஆடியோவும் முன்னுக்கு பின் முரணாக உள்ளதும் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், ஏபிபி நாடுக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த ராமசுப்பிரமணியன் அளித்துள்ள சிறப்பு பேட்டியில் கூறியிருப்பதாவது, ”நான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவன். பா.ஜ.க. நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன். பா.ஜ.க.வில் இப்போது நடப்பது அனைத்தும் வேதனையாக உள்ளது.
கே.டி.ராகவன் வீடியோ எந்தளவிற்கு உண்மை என்று நமக்கு தெரியாது. அண்ணாமலைக்கு ராகவன் மீது சந்தேகம் இருந்திருந்தால், காதும் காதும் வைத்தது போன்று அவரை அழைத்து உண்மையா என்று கேட்டிருக்க வேண்டும். அவரும் ஆம், இல்லை என்று கூறியிருப்பார். தற்போது ராஜினாமா செய்து விடுங்கள். 6 மாதம் ஏதும் இதைப்பற்றி பேச வேண்டாம் என்று அண்ணாமலை கூறியிருந்தால் யாரும் அதைப்பற்றி ஒன்றும் பேசப்போவதில்லை. அப்படி செய்திருந்தால் இது யாருக்கும் தெரிந்திருக்காது. வெளியிலே வந்திருக்காது. ஆனால் , அண்ணாமலை அந்த முடிவை எடுக்கவில்லை.
காரணம், அண்ணாமலை அரசியல்வாதி அல்ல. அண்ணாமலை அடிப்படையில் ஐ.பி.எஸ். அதிகாரி. திரும்பிப் பார்ப்பதற்குள் கட்சித் தலைவராகிவிட்டார். ஆனால், அண்ணாமலை இப்படி செய்தது தவறு. நாங்கள் குழு அமைத்து விட்டோம் என்று அறிவித்த பின்பும், மதனை ஏன் அழைத்து பேசினார்? அவரது ஆடியோ உண்மை என்று வைத்துக்கொண்டாலும், அண்ணாமலையை ஒரு விதத்தில் பாராட்டுகிறேன். அண்ணாமலைக்கு இந்த விவகாரம் தெரிந்திருந்தால், அவர்களை தனியாக அழைத்து ராஜினாமா செய்து விடுங்கள் என்று கூறுவதுதான் நல்லது எனக்கூறலாம். இந்த ஆடியோ அண்ணாமலையுடையது இல்லையென்று நான் சொல்லவில்லை. ஆனால், அதே ஆடியோவை முன்னும், பின்னும் ஒட்டி, வெட்டி போட்டிருந்தால் எப்படி சரியாக இருக்கும்?
வேல் யாத்திரையின்போது பல மோசமான நடவடிக்கைகள் இருந்ததாக நான் கேள்விப்பட்டுள்ளேன். காலிப்பசங்களையும், கொலைகாரர்களையும் சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள். கட்சிக்கு இது நல்லதல்ல என்று நான் ஏற்கனவே சொன்னேன். அந்த நேரத்தில் நிறைய தவறுகள் நடைபெற்றதாக நான் கேள்விப்பட்டேன். நான் பணமதிப்பிழப்பிற்கு எதிராக பேசியபோது பா.ஜ.க.வினரே என் மகளிடம் என்னை பற்றி பேசி மிரட்டினர். யார் மேலே எல்லாம் சந்தேகம் உள்ளதோ அவர்கள் மீது அண்ணாமலை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பா.ஜ.க.வில் பாலியல் குற்றச்சாட்டுகள் சமீபமாக வருகிறது. ஆனால், அது உண்மையா? பொய்யா? என்று தெரியவில்லை. இதுதொடர்பாக, விசாரிப்பதுதான் நல்லது. கே.டி.ராகவனின் வீடியோவை பொதுவெளியில் வெளியிடுங்கள் என்று சொல்வது எல்லாம் தவறு.
பா.ஜ.க.வைப் பொறுத்தவரை கடந்த சில வருடங்களாகவே பிராமணர்கள் ஓரங்கட்டப்படுகிறார்கள் என்பதே உண்மை. ராகவனை இதில் திட்டமிட்டு சிக்கவைத்தனர் என்று கூறமுடியாது. தமிழக பா.ஜ.க.விற்கு இது மிகப்பெரிய அளவில் கேடு உண்டாகிவிட்டது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத கட்சி என்ற எண்ணம் வந்துவிடும். தேசிய அளவில் கட்சித் தலைமை இதை கவனத்துடன் கையாளும் என்று நம்புகிறேன்.
மதன் ரவிச்சந்திரன் ஒன்றும் அவ்வளவு பெரிய பத்திரிகையாளர் அல்ல. அவருக்கு அவ்வளவு முக்கியத்துவம் அளித்து பேசியது ஆச்சரியமாக உள்ளது. இது அவரது அனுபவமின்மையைதான் காட்டுகிறது. கட்சிக்கே ஆபத்தை ஏற்படுத்தும் என்றால் அண்ணாமலை பதவிக்கு வேறு யாரையும் நியமிக்க வாய்ப்பு உள்ளது. செயல்தலைவராக வேறு யாரையும் நியமிக்க கூட வாய்ப்பு உள்ளது” இவ்வாறு அவர் பேசியுள்ளார்.