TN New Districts: தமிழ்நாட்டில் 7 புதிய மாவட்டங்கள் உருவாக உள்ளதாக வெளியான தகவலை,  மாநில அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.


தமிழ்நாட்டில் புதிய மாவட்டங்கள் உருவாகின்றனவா?


தமிழ்நாட்டில் புதியதாக ஏழு மாவட்டங்கள் உருவாக்கப்பட உள்ளதாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. அதாவது கும்பகோணம், பொள்ளாச்சி, கோவில்பட்டி, பழனி, ஆரணி, விருத்தாச்சலம் மற்றும் கோபிச்செட்டிபாளையம் ஆகிய மாவட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட உள்ளதாகவும், விரைவில் இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பை வெளியிடுவார் என்றும் கூறப்பட்டது. இதன் மூலம் நீண்ட நாட்களாக இருக்கும் தங்களது எதிர்பார்ப்பு நிறைவேற உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


பிரிகிறதா சேலம்?


இந்தியாவின் முதல் மாவட்டம் என்ற பெருமைக்குரிய சேலம் மாவட்டம்(Salem District). இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பு இன்று மாவட்டங்களாக உள்ள தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் நாமக்கல் மாவட்டங்கள் இணைந்து ஒருங்கிணைந்த சேலம் மாவட்டமாக இருந்தது. இந்நிலையில், ஆத்தூரை மையமாக கொண்டு சேலத்தில் இருந்து புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என, கடந்த அதிமுக ஆட்சியில் இருந்தே பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில், மீண்டும் இதுதொடர்பான தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.


உடைகிறதா கோவை?


ஆங்கிலேயர்கள் நிர்வாக வசதிக்காக 1804 ம் ஆண்டு நவம்பர் 24 ம் தேதியன்று கோவை நகரை தலைநகரமாக கொண்டு கோயம்புத்தூர்(Coimbatore) மாவட்டத்தை உருவாக்கினர். அதைதொடர்ந்து. 1868 ம் ஆண்டு கோவை மாவட்டத்தில் இருந்து பிரிந்து நீலகிரி, ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்கள் அடுத்தடுத்து உருவாகின. இதையடுத்து, 2011 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போதே, பொள்ளாச்சி மாவட்டம் உருவாக்கப்படும் என திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் தேர்தல் வாக்குறுதி அளித்தன. இருப்பினும் அதிமுகவின் 10 ஆண்டு கால ஆட்சியில் பொள்ளாச்சி மாவட்டம் பிரிக்கப்படவில்லை. இந்த நிலையில் திமுக ஆட்சியில் பொள்ளாச்சி மாவட்டம் புதிதாக உருவாக்கப்படும் என மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.


உருவாகிறது கோவில்பட்டி மாவட்டம்?


தூத்துக்குடி மாவட்டத்தில் 2-வது பெரிய நகரமாக கோவில்பட்டி விளங்குகிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான தங்க நாற்கர நான்குவழிச்சாலையில் கோவில்பட்டி நகரம் அமைந்துள்ளது. தமிழ்நாட்டின் சிறுதானியங்கள் உற்பத்தியில் முன்னணியில் உள்ள கோவில்பட்டி, ரெவின்யு டிவிஷன் என்ற வகையிலும் மாவட்ட அந்தஸ்து கொண்ட வருவாய்க் கோட்டமாக உள்ளது. எனவே இதனை மாவட்டமாக தரம் உயர்த்துவது பொருத்தமான செயல் என அப்பகுதி மக்கள் கருதுகின்றனர்.


வருகிறது கும்பகோணம் மாவட்டம்?


தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, கும்பகோணம் என 2 மாநகராட்சிகள் உள்ளன. கோயில் நகரம் என்று அழைக்கப்படும் கும்பகோணத்தில், ஏராளமான கோயில்கள் உள்ளன. இந்த மாநகராட்சியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என, பல காலங்களாகவே கோரிக்கைகள் நிலவி வருகின்றன. தேர்தல்கள் நெருங்கும் காலக்கட்டத்தில் எல்லாம் தஞ்சை மாவட்டம் 2 ஆக பிரித்து கும்பகோணம் தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் என்பதுதான் அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளாக இருக்கிறது. ஆனால் தேர்தலுக்கு பிறகு இதுதொடர்பான நடவடிக்கை எதுவும் இல்லை என்பதே நிதர்சனம். இப்படிபட்ட ஒரு சூழலில் தான், கும்பகோணம், பொள்ளாச்சி, கோவில்பட்டி, பழனி, ஆரணி, விருத்தாச்சலம் மற்றும் கோபிச்செட்டிபாளையம் ஆகிய மாவட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


”புதிய மாவட்டங்கள் உருவாகாது”


புதிய மாவட்டங்கள் உருவாவது தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், இதுதொடர்பாக அரசு தரப்பில் விளக்கம் வெளியாகியுள்ளது. அதன்படி, தற்போது மாவட்டங்களை பிரிப்பது தொடர்பாக எந்தவொரு திட்டமும் இல்லை என்றும், இந்த தகவல் வதந்தி என்றும் அரசு அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.