கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கடந்த 19 ஆம் தேதி விற்கப்பட்ட கள்ளச்சாரயத்தை அருந்திய நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு, கண் எரிச்சல், வயிற்றுவலி போன்ற உபாதைகள் ஏற்பட்டன. உடனடியாக அவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிலரின் நிலை மோசமடைந்ததால் புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சிலர் சேலம், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைக்கும் அழைத்துச் செல்லப்பட்டனர்.



கள்ளச்சாரயத்தால் 64 பேர் உயிரிழப்பு:


மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் 64 பேர் இதுவரை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் 38 பேரும், சேலம் அரசு மருத்துவமனையில் 22 பேரும், புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் 4 பேரும் சிகிச்சை பலனின்றி இதுவரை உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிலருக்கு கண் பார்வை குறைந்துள்ளதாக மருத்துவமனை தரப்பிலே இருந்து கூறப்படுகிறது.


சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை:


கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்திய 52 பேர் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 8 பேர் அதிதீவிர சிகிச்சை பிரிவு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதமுள்ள 10 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட 12 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர்.



மருத்துவ ஏற்பாடுகள் தீவிரம்:


விழுப்புரம் மருத்துவக் கல்லூரியில் இருந்து 4 சிறப்பு மருத்துவர்களை கொண்ட குழு கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த குழு, பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறது. அதோடு, சேலம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இருந்தும், சிறப்பு மருத்துவர் குழு கள்ளக்குறிச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 18 பேர் ஆம்புலன்ஸ்கள் மூலமாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு உயர்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். 8 பேருக்கு அவசர சிகிச்சை அளிப்பதற்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். 12 ஆம்புலன்ஸ்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் தயாராக வைக்கப்பட்டுள்ளன. மேல்சிகிச்சைக்கு தேவையான அனைத்து மருந்துகளும், விழுப்புரம், சேலம், திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இப்பணிகளை மேற்பார்வையிட, தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குனர் கோவிந்தராவ் மற்றும் மருத்துவக் கல்வி இயக்குனர் ஆகியோர் கள்ளக்குறிச்சிக்கு விரைந்துள்ளனர்.


கூண்டோடு மாற்றம்:


கள்ளச்சாராய விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரவண்குமார் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் அம்மாவட்ட காவல் கண்காணிப்பாள சமய்சிங் மீனாவையும் சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதோடு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவைச் சேர்ந்த, காவல் துணைக் கண்காணிப்பாளர் தமிழ்செல்வன், கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் கவிதா, திருக்கோவிலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் பாண்டி செல்வி, திருக்கோவிலூர், உதவி காவல் ஆய்வாளர் பாரதி மற்றும் அப்பகுதி காவல் நிலைய ஆய்வாளர்  ஆனந்தன், ஷிவ்சந்திரன், உதவி ஆய்வாளர், காவல் நிலைய எழுத்தர் பாஸ்கரன், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மனோஜ், காவல் துணை கண்காணிப்பாளர், திருக்கோவிலூர் ஆகியோரும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வழக்கினை தீர விசாரிக்கவும், தக்க மேல் நடவடிக்கைக்காகவும் உடனடியாக CBCID வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.