பசுமைப் புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படும் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் இன்று (செப். 28) வயது மூப்பின் காரணமாக சென்னையில் காலமானார். அவருக்கு வயது 98. 


யார் இந்த எம்.எஸ்.சுவாமிநாதன்?


மான்கொம்பு சாம்பசிவம் சுவாமிநாதன் கும்பகோணத்தில் 1925ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி பிறந்தார். அங்கேயே பள்ளிப் படிப்பை முடித்து, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.  ஐபிஎஸ் அதிகாரியாக 1948-ம் ஆண்டு தேர்வானார். ஆனால் பணியில் சேரவில்லை.


தந்தை பொது மருத்துவர். மகனும் மருத்துவராக வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால் 1942-ல் வங்காளத்தில்  ஏற்பட்ட பஞ்சம் சுவாமிநாதனை மிகவும் பாதித்தது. பசி போக்க, வேளாண் துறையில் ஆராய்ச்சி செய்ய முடிவெடுத்தார். பல்வேறு ஆய்வு நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். அரிசித் தட்டுப்பாட்டை நீக்க, நவீன வேளாண் அறிவியல் முறைகளைக் கண்டறிந்தவர் சுவாமிநாதன். 




அரிசித் தட்டுப்பாட்டைப் போக்கியவர்


நாட்டின் அரிசி, கோதுமை விளைச்சலைப் பெருக்க பல்வேறு புரட்சித் திட்டங்களை அறிமுகம் செய்தவர். உருளைக் கிழங்கு உற்பத்தி சார்ந்தும் பணியாற்றியுள்ளார். 


தாவரவியல், தாவர மரபியல், மரபியல், சைட்டோஜெனெடிக்ஸ், சூழலியல் பொருளாதாரம், தாவர இனப்பெருக்கம், சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகள் சார்ந்து பணியாற்றி உள்ளார். சர்வதேச இயற்கை மற்றும் இயற்கை வள பாதுகாப்பு அமைப்பின் தலைவராகவும் 6 ஆண்டுகள் பதவி வகித்துள்ளார்.




மத்திய அரசில் பொறுப்புகள் 


சர்வதேச அரிசி ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராக 1982 முதல் 1988 வரை பதவி வகித்துள்ளார். வேளாண் சார்ந்த ஆராய்ச்சிக்காக 3 பத்ம விருதுகளைப் பெற்றவர். மத்திய வேளாண்மைத் துறை முதன்மைச் செயலராகவும் பணியாற்றி உள்ளார்.


38 மதிப்புறு முனைவர் பட்டங்கள்


இந்திய, வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பல்வேறு கவுரவ டாக்டர் பட்டங்களைப் பெற்ற பெருமைக்குரியவர். இதுவரை இவ்வாறு 38 பட்டங்களைப் பெற்றுள்ளார்.


இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் தலைவராகப் பணியாற்றி உள்ளார். நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். மத்தியத் திட்டக்குழு துணைத் தலைவர் ஆகவும், உறுப்பினர் ஆகவும் இருந்துள்ளார். எஸ்.எஸ்.பட்நாகர் உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.  ஆசியாவின் நோபல் பரிசு என்று அழைக்கப்படும் மகசேசே விருது பெற்றவர். 



தனிப்பட்ட வாழ்க்கை


கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் தன்னுடன் படித்த மீனா சுவாமிநாதனை இவர் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு செளம்யா சுவாமிநாதன், மதுரா சுவாமிநாதன், நித்யா சுவாமிநாதன் ஆகிய 3 மகள்கள் உள்ளனர். மருத்துவரான செளம்யா சுவாமிநாதன் உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானியாகப் பணியாற்றியவர் ஆவார். பிரபலக் கல்வியாளரான மனைவி மீனா, கடந்த ஆண்டு காலமானார். 


காந்தியும் ரமண மகரிஷியும் சுவாமிநாதனின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள் ஆவர். இளமைக் காலத்தில் சுவாமி விவேகானந்தரைப் பின்பற்றியதாக, சுவாமிநாதன் பேட்டி அளித்துள்ளார். தங்கள் குடும்பத்துக்கு இருந்த 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் மூன்றில் ஒரு பகுதியை, வினோபாவேயின் பூமி தான இயக்கத்துக்குத் தானமாக அளித்தவர் சுவாமிநாதன்.


இவரின் பெயரில் அமைந்த எம். எஸ். சுவாமிநாதன் ஆய்வு நிறுவனம் (MS Swaminathan Research Foundation) என்னும் நிறுவனத்தின் அமைப்பாளராகச் செயல்பட்டு வந்தார். சூழலியல் பொருளாதாரத்தின் தந்தை என்று ஐ.நா. சபையால் பாராட்டப்பட்டவர். இவரின் மறைவுக்கு, பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.