பெங்களூர் சிறையில் பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டுள்ள ஹரிநாடார், தற்போது நடிகை விஜயலட்சுமியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தும் இந்த ஹரிநாடார் யார்?


கை மற்றும் கழுத்தில் எப்போதும் கிலோக்கணக்கில் தங்க நகைகள். நீண்ட முடி. ஆடி, பென்ஸ் மற்றும் ஜாக்குவார் கார்கள் என எப்போதும் ஆடம்பரமாக காட்சியளிப்பவர்தான் ஹரி நாடார். தமிழ்நாட்டில் உள்ள பலருக்கும் சமீபகாலமாகவே ஹரி நாடார் என்றால் மிகவும் பரிச்சயம். குறிப்பாக, நாடார் சமுதாய மக்களிடம் இவருக்கு தனிச்செல்வாக்கு உண்டு.




தற்போதைய தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் தாலுகாவில் உள்ள மேல இலந்தைக்குளத்தைச் சேர்ந்தவர் ஹரிநாடார். சாதாரணமான குடும்பத்தில் பிறந்த ஹரிநாடார், தனது இளமை வயதிலேயே தனது சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு வேலைக்காக வந்துள்ளார். சென்னைக்கு வேலைக்கு வந்த ஹரிநாடார் தனது தொடக்க காலத்தில் வெளியூர் செல்லும் பேருந்துகளுக்கு ஆட்களைப் பிடித்துக்கொடுக்கும் வேலை செய்து வந்துள்ளார்.


அந்த வேலையின்போது பல்வேறு முக்கிய நபர்களின் அறிமுகம் ஹரிநாடாருக்கு கிடைத்துள்ளது. தனக்கு கிடைத்த அறிமுகம், தான் சம்பாதித்த பணத்தைக்கொண்டு பைனான்ஸ் தொழிலில் ஹரிநாடார் இறங்கினார். பைனான்ஸ் தொழில் மூலம் ஹரிநாடாரின் பொருளாதார மதிப்பு பன்மடங்கு பெருகியது. பல முன்னணி தொழில் அதிபர்களுக்கும், முக்கியஸ்தர்களுக்கும் பைனான்ஸ் செய்யும் அளவிற்கு ஹரிநாடார் வளர்ந்துள்ளார். பின்னர், திரைத்துறையிலும் பலருக்கும் பைனான்ஸ் செய்யும் அளவிற்கு வளர்ந்துள்ளார்.




பொருளாதார ரீதியாக வளர்ந்த ஹரிநாடாருக்கு தனது செல்வாக்கை மேலும் அதிகரிக்க முடிவு செய்துள்ளார். தனது சமுதாய மக்களின் மூலமாக தன்னை வெளிக்காட்டிக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்த ஹரிநாடார், நாடார் சமுதாயத்தினரிடையே பிரபலங்களான ராக்கெட் ராஜா, சுபாஷ் பண்ணையாரிடம் நெருக்கத்தை அதிகரித்தார். பின்னர், 2009ம் ஆண்டு ராக்கெட் ராஜா உருவாக்கிய நாடார் மக்கள் சக்தி இயக்கத்தில் தன்னையும் இணைத்துக்கொண்டு, அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக உயர்ந்தார். இதன்மூலம் நாடார் சமுதாய மக்களிடம் மேலும் பிரபலமானார்.


அந்த காலகட்டத்தில் ஹரிநாடார் மீது பல்வேறு காவல்நிலையங்களில் குற்றவழக்குகள் பதிவாகியது. அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பாவிற்கு மிகவும் பக்கபலமாக இருந்தவர். சசிகலாபுஷ்பா அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பிறகும் அவருக்கு துணையாக இருந்தவர்களில் ஹரிநாடார் மிகவும் முக்கியமானவர்.




ஹரிநாடாரின் அதிகளவு தங்கநகைகள் அணிந்த தோற்றமும், அவரது நீண்ட தலைமுடியும் அவரை இன்னும் பலரையும் திரும்பி பார்க்க வைத்தது. இதனால், பலரும் அவரை நடமாடும் நகைக்கடை என்றே அழைத்தனர். அவர் உடன் எப்போதும் சுற்றும் இளைஞர்கள் பட்டாளமும் அவரது செயல்பாடுகளை  சமூகவலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.


பின்னர், கடந்த 2019ம் ஆண்டு நாடார் சமுதாயத்தினரிடையே செல்வாக்கு மிக்கவர்களாக வலம் வரும் ராக்கெட் ராஜா மற்றும் சுபாஷ் பண்ணையார் ஆகியோருடன் ஒருங்கிணைந்து “பனங்காட்டுப் படை கட்சி” என்ற கட்சியைத் தொடங்கினார்.




கட்சி தொடங்கியது மட்டுமின்றி கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற நாங்குநேரி இடைத்தேர்தலில் பனங்காட்டு படை கட்சி சார்பில் போட்டியிட்டார். அந்த தேர்தலில் 4 ஆயிரத்து 243 வாக்குகள் பெற்று மூன்றாவது இடம் பிடித்தார். நாம் தமிழர் கட்சி வேட்பாளரை பின்னுக்கு தள்ளிய ஹரி நாடார் அப்போது பலராலும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டார்.


மேலும், இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது ரோல்ஸ்ராய்ஸ் கார், பென்ஸ், ஆடி மற்றும் ஜாக்குவார் கார்களில் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதுமட்டுமின்றி, கடந்தாண்டு திரைத்துறையில் கால் பதிக்க வேண்டும் என்ற ஆசையுடன் 2கே அழகானது காதல் என்ற படத்தில் கதாநாயகனாகவும் நடிக்கத் தொடங்கினார். அந்த படத்தில் நடிகை வனிதா கதாநாயகியாக நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண