திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் தாலுக்கா நம்பியம்பட்டு கோவிலூரைச் சேர்ந்த ஞானசேகர் என்பவர் அளித்த தகவலின் பேரில் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தினை சேர்ந்த பாலமுருகன், பழனிச்சாமி, மதன்மோகன் ஆகியோர் அக்கிராமத்திற்கு ஆய்வுக்காக சென்றனர்.
தமிழகத்தில் உள்ள கிழக்கு குன்றுகளில் முக்கியமான மலைப்பகுதிகளில் ஒன்றாக ஜவ்வாது மலை அமைந்துள்ளது. பச்சை பசேல் என பரந்து விரிந்த காடும் மலை முகடுகளும் சூழ்ந்த இப்பகுதியில் மலைவாழ்மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள மலை பாறைகளில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த வெண்சாந்து நிறத்தில் வரையப்பட்ட பாறை ஓவியங்கள் இருப்பதை கண்டறிந்தனர். மலை முகட்டில் கிழக்குப்புறமாக அருகருகே உள்ள இரண்டு குகைத்தளங்களில் ஐந்துக்கும் மேற்பட்ட வெண்சாந்து நிற ஓவியங்கள் வரையப்பட்டு இருந்தது.
இந்த பாறை ஓவியங்களை ஆய்வு செய்த தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன் அவர் கூறுகையில், முதல் ஓவியத்தில் உருவத்தில் சில வடிவங்கள் ஒருங்கே உள்ளது. அது ஒருவனின் தலை அலங்காரமாக இருப்பது போலவும். அதே சமயம் ஒரு குறியீடு போலவும் உள்ளது என்றும் மேலும் இவ்வடிவத்தை வேட்டை தொடர்பான நிகழ்வுகளோடு பொருத்தியியும் பார்க்கலாம் என்றார். பின்னர் இரண்டாம் ஓவியத்தில் மனித உருவம் போல தோற்றம் கொண்ட வரைவு காணப்படுகின்றது. அதில் கையை விரித்த நிலையில் இருப்பது போன்றும் ஒரு கையில் ஏதோ ஒன்று வைத்திருப்பது போன்றும் இருந்தது. மேலும் மூன்றாம் உருவத்தில் ஒரு மனித உருவம், நீண்ட தலைப்பாகை போன்ற தோற்றத்துடன் ஒரு கையில் ஆயுதம் ஒன்றை தூக்கி கொண்டு நடந்து செல்வது போன்று காணப்படுகின்றது. நான்காம் உருவத்தில் மனித உருவம் போன்ற ஒன்று காணப்படுகின்றது .
ஒரு கையில் நீண்ட குச்சி போன்ற ஆயுதம் வைத்திருப்பது போன்று உள்ளது. அதற்கு முன்பு பகுதியில் மிகவும் அழிந்த நிலையில் மாடு போன்ற விலங்கின் தோற்றம் தெளிவற்ற நிலையில் காணப்படுகின்றது. கீழே மனித உருவம் போன்ற உருவம் கையில் குச்சி போன்ற ஆயுதம் தூக்கி நடந்தும் செல்வது போல உள்ளதாக தெரிவித்தார்.
ஜவ்வாது மலையில் அரியதாக காணப்படும் இவ்வகை பாறை ஓவியங்கள் காலப்போக்கில் மழையின் காரணமாகவும் மக்களின் அறியாமையின் காரணமாகவும் சேதமடைந்துள்ளது. பழந்தமிழர்களின் வாழ்வியலுக்கு சான்றாக திகழும் இது போன்ற பாறை ஓவியங்களை வரும் தலைமுறைகள் பார்த்து தெரிந்து கொள்வதற்காக பாதுகாத்தும் ஆவணப்படுத்தவும் வேண்டும் என தமிழக அரசு வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.