Thirumavalavan: மக்களவைவில் திருமாவளவன் பேசிக் கொண்டிருக்கும் போதே, மைக் அணைக்கப்பட்ட சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.


சபாநாயகருக்கு திருமாவளவன் வாழ்த்து:


நாடாளுமன்ற மக்களவையின் புதிய சபாநாயகராக தேர்வான ஓம் பிர்லாவிற்கு வாழ்த்து தெரிவித்து, விசிக தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்.பியுமான திருமாவளவன் உரையாற்றினார். அப்போது, “இரண்டாவது முறையாக அவையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உங்களுக்கு, நான் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பிலும், இந்தியா கூட்டணி சார்பிலும் மனம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தங்கள் இருக்கையில் வலது பக்கத்தில் செங்கோல் உள்ளது. செங்கோல் என்பது அதிகாரத்தின் அடையாளம் அல்ல. யார் பக்கமும் சாயக் கூடாது. நேர்மையாக இருக்க வேண்டும் என்ற நீதி தவறாமையின் அடையாளமாகும்.



ஆளுங்கட்சிக்காக வளைந்துபோகக் கூடாது - திருமாவளவன்:


இந்த இருக்கையின் அழகே நீதி தவறாமை தான். கடந்த காலங்களில் சிறப்பான அவைத்தலைவர் என்பதை நிரூபித்து இருக்கிறீர்கள். ஆனால், அளுங்கட்சிக்கு ஒரு சார்பாகவும், எதிர்க்கட்சிகளுக்கு ஒரு வகையாகவும் அணுகி இருக்கிறீர்கள் என்பது உண்மை. ஆளுங்கட்சி என்பது ஆட்சி அதிகாரத்தோடு உள்ள ஒரு வலுவான கட்சி. ஆகவே ஆளுங்கட்சி சார்பு இருக்கக் கூடாது என்பதை தான் எதிர்க்கட்சி தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பல்வேறு மசோதாக்களை பண மசோதா என்று ஆளுங்கட்சி கடந்தமுறை அறிமுகப்படுத்தியது. எது பண மசோதா என்று தீர்மானிக்கும் அதிகாரம் உங்களிடம் மட்டும் தான் உள்ளது. அந்த அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய ஆளுங்கட்சி, மீண்டும் அத்தகைய முயற்சியை மேற்கொள்ளும். அதற்கு நீங்கள் ஒருபோதும் வளைந்து போகக் கூடாது என வேண்டுகோளாக வைக்கிறேன். (நேரம் ஆகிவிட்டது அமருங்கள் என சபாநாயகர் அடுத்தடுத்து இரண்டு முறை வலியுறுத்தினார்)


திருமாவளவன் கேள்வியும்  - மைக் ஆஃபும்:


ஒரு மக்களவை தலைவர் என்கிற அதிகாரத்தை பயன்படுத்தி, நாடாளுமன்ற வளாகத்தில் இருந்த புரட்சியாளர் அம்பேத்கர், மகாத்மா காந்தியடிகள் மற்றும் மகாத்மா ஜோதி பாபு பூலே போன்ற மாபெரும் தலைவர்களின் சிலையை ஒரு ஓரமாக கொண்டு போய் வைத்துள்ளீர்கள்” என பேசிக் கொண்டு இருந்தார். அப்போது திருமாவளவனின் மைக் ஆஃப் செய்யப்பட்டது. ஆனாலும், தலைவர்களின் சிலை வளாகத்தில் இருந்து அகற்றப்பட்டது தொடர்பாக, திருமாவளவன் தொடர்ந்து கேள்வி எழுப்பினார். அவருக்கு ஆதரவாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பினர்.


இந்நிலையில் திருமாவளவன் பேசிக்கொண்டு இருக்கும்போதே, மைக் ஆஃப் செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், சபாநாயகர் நடுநிலையும் செயல்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர். எதிர்காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நிகழக்கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளனர்.