’’பஞ்சாயத்துத் தலைவருக்கு சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் உண்டு. இந்த அதிகாரத்தை வைத்துத்தான் பிஹாரில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.


மத்திய அரசுதான் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த முடியும் என்று முதல்வர் சொல்வது சரியல்ல. இது நாடகம்’’ என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னை, தி.நகரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


சாதிவாரி கணக்கெடுப்பை  உடனடியாக நடத்த வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். தீர்மானத்தை முன்மொழிந்து பேசுகையில், “சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் அரசின் நிலைப்பாடு. சமுதாயத்தில் அனைவரும் வளர்ச்சி அடைய வேண்டும் என அரசு செயல்பட்டு வருகிறது. 


ஆனால் மத்திய அரசுதான் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும். அப்படி நடத்தும்போது சாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த வேண்டும். விதிகளின்படி சாதிவார் கணக்கெடுப்பில் உள்ள சில விவரங்களை மாநில அரசால் சேகரிக்க முடியாது. மக்கள் தொகை, சாதி வாரி கணக்கெடுப்பு போன்றவற்றை மத்திய அரசே முழுமையாக மேற்கொள்ள முடியும். மக்கள் தொகை கணக்கெடுப்பு மத்திய அரசின் பட்டியலில் உள்ளது. 


2021 முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தாமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. கொரோனா உள்ளிட்ட காரணங்களை காட்டி மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்தவில்லை” என முதலமைச்சர் ஸ்டாலின் கூறி இருந்தார். 


இந்த நிலையில் மாநில அரசாலேயே சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த முடியும் எனவும் தமிழக அரசு நாடகமாடுவதாகவும் பாமக தலைவர் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார். 


சென்னை, தி.நகரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ’’2008ஆம் ஆண்டு புள்ளிவிவரங்கள் சேகரிப்பு சட்டத்தின்படி மாநில அரசுகளால் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த முடியும். நாடாளுமன்றத்தில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டதன் நோக்கமே மக்கள் நலத் திட்டங்களுக்கான பயனாளிகளை தேர்வு செய்வதற்கான சாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட பல்வேறு புள்ளிவிவரங்களை திரட்டுவதற்காகத் தான். 


பஞ்சாயத்துத் தலைவருக்கு சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் உண்டு. இந்த அதிகாரத்தை வைத்துத்தான் பிஹாரில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. மத்திய அரசுதான் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த முடியும் என்று முதல்வர் சொல்வது சரியல்ல. இது நாடகம்.


விவாதத்துக்குத் தயார்


வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு தொடர்பாக அமைச்சர் சிவசங்கர் விவாதத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார், அவரது அழைப்பை ஏற்று அவரோடு விவாதம் நடத்த நான் தயாராக இருக்கிறேன். தேதி இடம் நேரம் ஆகியவற்றை அமைச்சர் சிவசங்கரே முடிவு செய்து அழைக்கட்டும். எப்போது அழைத்தாலும் விவாதத்திற்கு வருவதற்கு நான் தயாராக உள்ளேன்’’ என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.