திருவண்ணாமலையில், பவுர்ணமி என்றாலே கிரிவலம் செல்ல பக்தர்கள் குவிந்துவிடுவார்கள். ஒவ்வொரு பவுர்ணமியன்றும் தவறாமல் கிரிவலம் செல்லும் பக்தர்கள் லட்சக்கணக்கில் உள்ளனர். அந்த வகையில், வரும் 11-ம் தேதி, பவுர்ணமியை ஒட்டி, கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
சிறப்பு வாய்ந்த தை மாத பவுர்ணமி
தமிழர்களுக்கு தை மாதம் என்றாலே மிகவும் சிறப்பு வாய்ந்த மாதம்தான். தை பிறந்தால் வழி பிறக்கும் என்று கூறுவார்கள். அனால், தை மாதத்தில் வரும் அனைத்து விஷேஷங்களுமே பக்தர்களுக்கு சிறப்பு வாய்ந்ததுதான். அந்த வகையில், தை மாதத்தில் வரும் பவுர்ணமியும் சிறப்பானதுதான். இதனால், பவுர்ணமி நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் மேற்கொள்வார்கள். இந்த தை மாதத்தில் 30-ம் தேதி, அதாவது ஆங்கில தேதிப்படி, வரும் 12-ம் தேதி புதன் கிழமை பவுர்ணமி வருகிறது. அதற்காக திருவண்ணாமலை கோயில் நிர்வாகம் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது.
கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை வெளியிட்ட நிர்வாகம்
வரும் 12-ம் தேதி பவுர்ணமி என்றாலும், 11-ம் தேதியன்று, அதாவது தமிழ் மாத தேதிப்படி, தை 29-ம் தேதி இரவு 7.59 மணிக்கே பவுர்ணமி தொடங்கிவிடுகிறது. அது, 12-ம் தேதி, அதாவது தை மாதம் 30-ம் தேதி இரவு 8.12 மணிக்கு நிறைவடைகிறது. அதனால், 11-ம் தேதி இரவு 7.59 மணிக்குமேல் பக்தர்கள் கிரிவலம் மேற்கொள்ள உகந்த நேரம் என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு ஏற்பாடுகளை செய்துவரும் அதிகாரிகள்
வரும் 11-ம் தேதி தைப்பூசமும் வருவதால், ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு படையெடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து, கோயில் நிர்வாகம் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது. மாவட்ட நிர்வாகம் சார்பில், கிரிவலம் வரும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்கொள்ளும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.