தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ரூ. 100 மதிப்பிலான கருணாநிதி நினைவு நாணயம் நேற்று (ஆக.18) வெளியிடப்பட்டது. இதற்கான விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் மாலை 6. 50 மணியளவில் தொடங்கி, நடைபெற்றறது.


கலைஞர் நூற்றாண்டு விழா, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற நிலையில், கலைஞர் நாணயத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார். 


இந்த நிலையில் விழா குறித்து திமுக நிர்வாகியும் சட்டமன்ற உறுப்பினருமான கே.பி. சங்கர் இல்லத் திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:


’’கடந்த ஓராண்டு காலமாக முத்தமிழறிஞர்‌‌ கலைஞர்‌ கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை அரசு சார்பிலும்‌, கட்சியின்‌ சார்பிலும்‌, தனிப்பட்ட முறையிலும்‌ கொண்டாடிக்‌ கொண்டிருக்கிறோம்‌.


இப்படிப்பட்ட விழா எந்தத்‌ தலைவருக்கும்‌ நடந்தது கிடையாது


தமிழ்நாட்டில்‌ மட்டுமல்ல, இந்தியாவில்‌ இருக்கக்கூடிய பல்வேறு மாநிலங்களிலும்‌, வெளிநாடுகளிலும்‌ கலைஞர்‌ கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை தொடர்ந்து கொண்டாடிக்‌ கொண்டு வருகிறோம்‌. இந்தியாவில்‌ இப்படிப்பட்ட விழா எந்தத்‌ தலைவருக்கும்‌ நடந்தது கிடையாது. இவ்வளவு சிறப்பான விழாக்கள்‌ நடத்தியிருக்கின்றோம்‌ என்று சொல்லும்‌ அளவிற்கு நாம்‌ நடத்திக்‌ கொண்டிருக்கிறோம்‌.


அது மட்டுமல்ல, தலைவர்‌ கலைஞர்‌ பெயரால்‌; கிண்டியில்‌ உயர்சிறப்பு மருத்துவமனை, மதுரையில்‌ பிரம்மாண்டமான நூலகம்‌, கிளாம்பாக்கத்தில்‌ அனைத்து வசதிகளும்‌ கொண்ட பேருந்து முனையம்‌ போன்ற எத்தனையோ பயனுள்ள அமைப்புகளை கலைஞர்‌ பெயரால்‌ ஏற்படுத்தியிருக்கிறோம்‌.


உதயநிதி சொன்னதுபோல, 1 கோடியே 15 லட்சம்‌ மகளிர் மாதந்தோறும்‌ ஆயிரம்‌ ரூபாய்‌ பெறக்கூடிய அளவிற்கு கலைஞர்‌ மகளிர்‌ உரிமைத்‌ தொகைத்‌ திட்டம்‌ அதுவும்‌ கலைஞர்‌ பெயரில்‌தான் அமைந்திருக்கிறது.


நாணயம்‌ அறிவாலயத்திற்கு வந்துவிட்டது


இதற்கெல்லாம்‌ மகுடம்‌ வைப்பதுபோல்‌, நேற்றைய தினம்‌ நடந்த நிகழ்ச்சி, நாணயம்‌ வெளியீட்டு விழா. நாணயம்‌ அறிவாலயத்திற்கு வந்துவிட்டது. யார்‌ வேண்டுமானாலும்‌, எப்போது வேண்டுமானாலும்‌ சென்று 100 ரூபாய்‌ நாணயத்தை பெற்றுக்‌ கொள்ளலாம்‌. 100 ரூபாய்‌ நாணயம்‌தான்‌. ஆனால்‌ அதன்‌ மதிப்பு 10,000 ரூபாய்‌. மதிப்பே கிடையாது.


யார்‌ வேண்டுமென்றாலும்‌ 10,000 ரூபாய்‌ கொடுத்து அறிவாலயத்தில்‌ சென்று அதைப்‌ பெற்றுக்‌ கொள்ளலாம்‌. ஏனென்றால்‌, காந்தி‌ நேற்று முன்தினம்‌ நடைபெற்ற மாவட்டச்‌ செயலாளர்‌கூட்டத்தில்‌ நான்‌ 1 இலட்சம்‌ தருகிறேன்‌ என்று சொன்னார்‌. அவர்‌ 1 இலட்சம்‌ என்ன, 10 இலட்சம்‌ கூட கொடுத்து வாங்கிக்‌ கொள்வார்‌’’.


இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


இதுதவிர்த்து கலைஞர் 100 ரூபாய் நாணயத்தை ஆர்பிஐ வங்கி கிளை அல்லது இந்திய தலைமை தபால் நிலையம் ஆகியவற்றை அணுகி பெற்றுக்கொள்ளலாம். இந்த நாணயங்கள் குறிப்பிட்ட அளவே தயாரிக்கப்பட்டு இருக்கும் என்பதால், விலை ஆயிரக்கணக்கில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.