முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான நீலகிரியில் உள்ள கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இரவில் ஆயுதங்களுடன் ஸ்டேட்டுக்குள்  அத்துமீறி நுழைந்த கும்பல், பாதுகாவலராக இருந்த ஓம்பகதூர் என்பவரை கொலை செய்து விட்டு, சில மதிப்புமிக்க பொருட்களை திருடிச் சென்றது. இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சயன், சதீசன், உதயகுமார், சம்சிர் அலி, தீபு ,சந்தோஷ், திலிப் ஜாய், வாளையார் மனோஜ், மனோஜ்  உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.




கோடநாடு வழக்கில் தொடர்புடைய 5 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். குறிப்பாக இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜ், சேலம் மாவட்டத்தில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். அதேபோல கோடநாடு எஸ்டேட்டில் கம்யூட்டர் ஆப்ரேட்டராக பணியாற்றிய தினேஷ்குமார் என்பவர் தற்கொலை செய்து கொண்டார். கனகராஜின் நண்பரும், முக்கிய குற்றவாளியான சயன் கேரள மாநிலம் பாலக்காடு அருகே குடும்பத்துடன் செல்லும் போது கார் விபத்தில் சிக்கினார். அதில் சயனின் மனைவி மற்றும் மகள் இருவரும் உயிரிழந்தனர்.


முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பு இருப்பதாக முக்கிய குற்றவாளியான சயன் மற்றும் விபத்தில் உயிரிழந்த கனகராஜின் அண்ணன் தனபால் ஆகியோர்  கூறியிருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் கூடுதல் விசாரணை தேவையுள்ளது என நீதிமன்றத்தில் தெரிவித்த நீலகிரி காவல் துறையினர், சயானை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது. இதையடுத்து கடந்த 17ஆம் தேதி ஆஜரான சயனிடம் 3 மணி நேரம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். இதையடுத்து கடந்த 24 ஆம் தேதி விபத்தில் உயிரிழந்த கனகராஜ் அண்ணன் தனபாலிடம் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தினர். இதனால் வழக்கு விசாரணை தீவிரமடைந்துள்ளது. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா உள்ளிட்ட பலரை விசாரிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


இந்நிலையில் உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கோடநாடு வழக்கு விசாரணை நடைபெறுகிறது. இந்த வழக்கு விசாரணைக்கு முதல் நபராக சயான் நீதிமன்றத்திற்கு வந்தார். சயான் நீதிமன்றத்திற்குள் நுழையும் முன்பாக, நீதிமன்ற வளாகத்தில் உள்ள விநாயகர் கோவிலில் வழிபட்டு சென்றார். இதையடுத்து அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர்களான ஷாஜகான், கனகராஜ் ஆகியோர் நீதிமன்றத்திற்கு வந்தனர். இதையடுத்து உதகை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி சஞ்சய் பாபா முன்னிலையில் வழக்கு விசாரணை நடைபெற்றது.




இதற்கு முன்பாக கோடநாடு வழக்கில் தொடர்புடைய சிபு, சந்தோஷ்சாமி, சம்சிர் அலி ஆகிய 3 குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர் விஜயன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “கோடநாடு பங்களாவை பார்வையிட மனு அளித்துள்ளோம். வழக்கில் குழப்பங்கள் அதிகரிப்பதால், சம்பவ இடத்தை பார்வையிட அனுமதி கோரியுள்ளோம். இன்று வழக்கில் முக்கியமான திருப்பங்கள் ஏற்படலாம் என நம்புகிறோம். எங்கள் தரப்பு சார்பில் சூழலுக்கு ஏற்ப புதிய மனுத்தாக்கல் செய்வோம்.


சசிகலா, எடப்பாடி பழனிசாமியை விசாரணைக்கு அழைக்க வேண்டும் எங்கள் தரப்பில் கேட்டுள்ளோம். அது இன்னும் எண்ணிடப்படவில்லை. அதுவும் இரண்டொரு நாளில் ஏற்பட்டு விடும். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ளது. அது குறித்து நீதிமன்றத்தில் தகவல் தெரிவிப்போம். கோடநாடு வழக்கில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வாய்ப்பு குறைவு. காவல் துறையினரிடம்  யாரிடம் எல்லாம் விசாரித்தோம் என்பதை சொல்ல வாய்ப்புள்ளது. இன்று சாட்சிகள் விசாரிக்க வாய்ப்பு குறைவு” என அவர் தெரிவித்தார்.