உலகப் பொதுமறை என திருக்குறள் போற்றப்படுகிறது. அதனை எழுதிய திருவள்ளுவர் வெள்ளை உடையணிந்தபடி இருக்கும் படம், தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்டு அனைத்து இடங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் நூலக நுழைவு வாயிலில் புதிதாக திருவள்ளுவர் படம் பொருத்தப்பட்டுள்ளது. வழக்கமான வெள்ளை நிற உடையணிந்த திருவள்ளுவர் படத்திற்கு பதிலாக, காவி உடையணிந்த திருவள்ளுவர் படம் வைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகிய நிலையில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், சமூக நீதிக் கட்சி உள்ளிட்ட அமைப்பினரும் காவி திருவள்ளுவர் படம் வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதேபோல பல்கலைக்கழகத்தின் மீது சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்தன. அனைவருக்கும் பொதுவான திருவள்ளுவருக்கு ஒரு மதச்சாயல் ஏற்படுத்துவது ஏற்புடையது அல்ல எனவும், இது தொடர்பாக அரசு விசாரணை நடத்தி காவி உடையணிந்த திருவள்ளுவர் படம் வைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர். எதிர்ப்புகள் கிளம்பியதை அடுத்து, நூலகத்தில் வைக்கப்பட்டு இருந்த காவி உடையணிந்த திருவள்ளுவர் படத்தை பல்கலைகழக நிர்வாகம் உடனடியாக அகற்றியது. அந்த இடத்தில் வெள்ளை உடையணிந்த திருவள்ளுவர் படம் வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “கோவை வேளாண் பல்கலைக் கழக நூலகத்தில் 2017-18-ஆம் ஆண்டு அடிமை அதிமுக அரசின் சார்பில் காவி நிறம் கொண்ட அய்யன் திருவள்ளுவரின் புகைப்படம் வைக்கப்பட்டது என்று முதற்கட்ட விசாரணையில் தெரிவந்துள்ளது. எனது கவனத்திற்கு வந்தவுடன் அதிகாரிகளை அழைத்து பேசி இப்போது அந்த புகைப்படத்தை அகற்றி விட்டு தமிழக அரசின் அதிகாரப்பூர்வமான அய்யன் திருவள்ளுவர் படம் அதே இடத்தில் பொருத்தப்பட்டது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
காவி திருவள்ளுவர் படத்தை உடனடியாக அகற்றிய தமிழ்நாடு அரசின் நடவடிக்கைக்கு திராவிடர் கழகம் சார்பில் பாராட்டு தெரிவித்து, அவ்வமைப்பின் தலைவர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “அரசுப் பேருந்துகளில் அங்கீகரிக்கப்பட்ட திருவள்ளுவர் படமும், குறள்பாக்களும் கலைஞர் போக்குவரத்துத் துறை அமைச்சராக அண்ணா அமைச்சரவையில் இடம்பெறச் செய்தார். அது அதிமுக ஆட்சியில் கடைபிடிக்காத நிலையை சுட்டிக்காட்டிய உடனே முதலமைச்சரின் அலுவலகத்திலிருந்து மாற்றி செயல்பட அறிவுறுத்தியதன் விளைவாக மீண்டும் இடம்பெற்றன.
கோவை வேளாண் பல்கலைக் கழகத்தில் திருவள்ளுவருடைய படம் காவி உடையுடன் இருந்ததை அகற்றி, புதிய அரசு ஒப்புதல் பெற்ற திருவள்ளுவர் படம் அவ்விடத்தில் இடம்பெற்றுள்ளது என்று வேளாண்மை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தனது ட்விட்டரில் குறிப்பிட்டார் என்ற செய்தியும் மகிழத்தக்க செய்தியாகும். அவருக்கும் நமது நன்றி! பண்பாட்டு படையெடுப்பிலிருந்து தமிழ்நாட்டை பாதுகாப்பதில் கண்ணை இமைகாப்பது போல் கடமையாற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்துள்ள செயல்படும் திமுக அரசு என்பது பெருமையாக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
திருவள்ளுவர் படம் மாற்றப்பட்டது குறித்துப் பேசிய தபெதிக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன், “காவி நிற திருவள்ளுவர் படம் மாற்றப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. அதேசமயம் காவி திருவள்ளுவர் படம் வைக்க காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.