சென்னை அடையாறு ஈகோ பார்க் சென்றிருக்கிறீர்களா? இல்லாவிட்டால் ஒருமுறையேனும் சென்று வரலாமே. ஏனென்று கேட்டால் இதோ சொல்கிறோம் ரீசன்.


முன்பெல்லாம் அடையாறு ஈகோ பார்க் வருவோரின் எண்ணிக்கை காலை, மாலை என்று ஒவ்வொரு நேரத்துக்கு சராசரியாக 60 என்று இருந்தது ஆனால் தற்போது அது 100 என்று அதிகரித்துள்ளது. இந்த பூங்காவிற்கு தொல்காப்பிய பூங்கா என்றொரு பெயரும் இருக்கிறது.


இந்தப் பூங்காவிற்கு 4 முறையாக மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அதாவது காலை 6.30 மணி முதல் 8 மணி வரை. பின்னர் 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை. பிற்பகல் 2.30 மணி 4.30 மணி வரையிலும் மாலை வேளையில் 4.30 மணி முதல் 6.00 மணி வரையிலும் மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.


இந்தப் பூங்காவில் இப்போது அன்றாடம் குறைந்தது 400 பேர் வரை வருகின்றனர் என்று கூறப்படுகிறது. வாரத்தில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை 6 நாட்களும் பொது விடுமுறை நாட்கள் தவிர அனைத்து நாட்களிலும் மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். ஒரு நபருக்கு ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பள்ளி, கல்லூரி வாயிலாக மாணவர்கள் அழைத்து வரப்பட்டார்கள் என்றால் அவர்களிடம் ரூ.10 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.


அதேபோல் வாக்கிங் செல்ல வருவோரிடமும் ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வாக்கிங் செல்ல மாதந்தர கட்டணமும் உண்டு. மாதத்திற்கு ரூ.500 பாஸ், மூன்று மாதங்களுக்கு ரூ.2500 பாஸ் அல்லது ஆண்டு சந்தா ரூ.5000 வசூலிக்கப்படுகிறது. இந்த பூங்காவிற்குள் நடப்பதற்கு 3.2 கிலோ மீட்டர் இருக்கிறது. 2011ல் இந்த ஈகோ பார்க் திறக்கப்பட்டது. மொத்தம் 58 ஏக்கர் பரப்பளவில் இது அமையப்பெற்றுள்ளது.


அடையாறு பூங்காவிற்குள் அலையாத்திக் காடுகள் இருப்பதாலேயே இது சூழலியல் ரீதியாக பாதுகாக்கப்பட வேண்டிய பகுதி என்று அறியப்பட்டதால் மே 2022 முதல் இந்த பூங்காவில் நுழைய கட்டணம் வசூலிக்கப்படுகிறது.