தேசிய கீதத்தை ஆளுநர் அவமதித்தது மோசமான, இழிவான செயல் என்றும் அதைத் தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் குடியரசுத் தலைவரைச் சந்தித்த டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
’’தமிழகம் பெரியார் மண். இங்கு ஆர்எஸ்எஸ், சனாதனக் கொள்கைகள் செல்லுபடி ஆகாது. அதைத் திணிப்பதே ஆளுநரின் நோக்கம்’ என்றும் டி.ஆர்.பாலு எம்.பி. தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் நடந்துகொண்ட விவகாரம் தொடர்பாக டெல்லியில், தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்துப் பேசினர். தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகளாக மாநில சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மக்களவை எம்.பி.க்கள் ஆர். ராசா, டி.ஆர்.பாலு மற்றும் மாநிலங்களவை எம்.பி. என்.ஆர். இளங்கோ சென்றனர்.
ஆளுநர் மரபை மீறி நடந்துகொண்டதாகக் குற்றம் சாட்டிய அவர்கள், ஆளுநருக்கு அறிவுரை வழங்குமாறு குடியரசுத் தலைவருக்குக் கோரிக்கை விடுத்தனர். முதல்வர் எழுதிய கடிதத்தையும் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிடம் வழங்கினர்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து டி.ஆர்.பாலு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
’’சட்டப்பேரவையில் தமிழக அரசு தயாரித்த உரையில் சிறு எழுத்தைக்கூட அப்போதைய ஆளுநர்கள் மாற்ற மாட்டார்கள். ஆனால் இந்த ஆளுநர் சில வார்த்தைகளை சேர்த்தும் நீக்கியும் இருக்கிறார். வழக்கத்துக்கும், இயல்புக்கும் மாறாக நடந்த சம்பவங்கள் குறித்து குடியரசுத் தலைவரிடம் விவரித்தோம். I will see என்று அவர் தெரிவித்தார்.
தேசிய கீதத்தை ஆளுநர் அவமதித்தது மோசமான, இழிவான செயல். அதைத் தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தமிழகம் பெரியார் மண். இங்கு ஆர்எஸ்எஸ், சனாதனக் கொள்கைகள் செல்லுபடி ஆகாது. அதைத் திணிப்பதே ஆளுநரின் நோக்கம்.
முதலமைச்சர் எழுதி இருந்த உறையில் இடப்பட்ட கடிதத்தையும் குடியரசுத் தலைவரிடம் வழங்கினோம். அதில் என்ன இருக்கிறது என்று எங்களுக்குத் தெரியாது’’.
இவ்வாறு நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்தார்.
பின்னணி என்ன?
முன்னதாகக் கடந்த வாரம் சென்னை ஆளுநர் மாளிகையில் காசி தமிழ்ச் சங்கமம் ஒருங்கிணைப்பாளர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, மாநிலத்தை தமிழ்நாடு என்றழைக்கப்படாமல் தமிழகம் என்றே அழைக்கப்பட வேண்டும் என தெரிவித்தது பெரும் சர்ச்சைகளை கிளப்பியது. ஆளுநரின் இந்த பேச்சுக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழ்நாடு என்ற வார்த்தை இந்திய அளவில் ட்விட்டரில் ட்ரெண்டானது.
பெரியார், அண்ணா பெயர்கள் தவிர்ப்பு
இதற்கிடையே ஜனவரி 9 நடப்பாண்டின் தமிழ்நாடு அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இதில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தனது உரையில் இடம் பெற்றிருந்த தமிழ்நாடு அரசு என்ற வார்த்தைக்கு பதிலாக THIS Government (இந்த அரசு) என தெரிவித்திருந்தார்.
அதேபோல, தமிழக அரசு தயாரித்து வழங்கிய ஆளுநர் உரையில் இடம்பெற்றிருந்த பல்வேறு கருத்துக்களை வாசிக்காமலும் பெரியார், அண்ணா உள்ளிட்ட பெயர்களைத் தவிர்த்தது தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினருக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஆளுநரின் செயலைக் கண்டித்து சட்டப்பேரவையில் அங்கம் வகித்த தி.மு.க. கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.
ஆளுநருக்குக் கண்டனம்
இதற்கிடையே தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிக்கொண்டிருந்தபோதே ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவையில் இருந்து பாதியில் வெளியேறினார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஆளுநரின் இந்த செயலுக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.