தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அணிந்திருக்கும் கடிகாரம் சமீப காலமாக சர்ச்சையாகி உள்ளது. அந்த வாட்சில் என்னதான் சிறப்பு என்பது இப்போது டாக் ஆஃப் தி டவுனாக உள்ளது.


பின்னணி என்ன?


திடீரென்று இந்த வாட்ச் இவ்வளவு பிரபலமாக காரணம் கோவையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டி. அந்த பேட்டியில் அவரிடம் சமூக வலைதளங்களில், ட்ரெண்டாகி வரும் அவர் கையில் கட்டியுள்ள ரூ.3.50 லட்சம் மதிப்புள்ள வாட்ச் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "நாம் அணியும் சட்டை, வேட்டி, நடந்து செல்வது, கார், இவற்றையெல்லாம் ஒப்பிடுவதைத்தான் இப்போது புதிதாக ஆரம்பித்துள்ளனர்.


நான் கையில் கட்டியிருக்கும் வாட்ச், ரபேஃல் விமானங்களை இந்தியா ஆர்டர் செய்தபோது, அந்த விமானத்தின் பாகங்களை வைத்து 500 வாட்ச்கள் செய்யப்பட்டன. அது ஒரு கலெக்டட் எடிஷன், ஸ்பெஷல் எடிஷன். இந்த வாட்சோட பெயரே, ரபேஃல் ஸ்பெஷல் எடிஷன்.


ரபேஃல் விமானத்தில் என்னவெல்லாம் பாகங்கள் இருக்கிறதோ, நான் கட்டியிருக்கும் வாட்ச்சில், அந்த பாகங்கள் எல்லாம் இருக்கிறது. எனக்கு ரஃபேல் விமானத்தை ஓட்டக்கூடிய பாக்கியம் கிடைக்கவில்லை. ஏனென்றால் நான் ஒரு பெரிய தேசியவாதி. ரஃபேல் விமானத்தை ஓட்டக்கூடிய பாக்கியம் கிடைக்கல, அதனால், அந்த ரஃபேல் விமானத்துக்குப் பக்கத்தில் இருக்கக்கூடிய இந்த வாட்சை கட்டியிருக்கிறேன். அந்த 500 வாட்ச் செய்யப்பட்டதில் 149-வது வாட்ச் என்னுடையது.


Dassault Aviation இவர்கள்தான் ரஃபேல் விமானத்தை உருவாக்குபவர்கள். அந்த ரஃபேல் விமானத்தின் பாகங்களில் இருந்து இந்த வாட்ச் செய்யப்பட்டது. உலகத்தில் 500 வாட்ச்கள்தான் இருக்கிறது. அதனால், என் உடம்பில் உயிர் ஓடுகிற வரைக்கும் இந்த வாட்ச் என்னிடம் இருக்கும் என்று கூறியிருந்தார்.


BR 03 RAFALE சிறப்பம்சம்
 
BR 03 RAFALE என்கிற பெயரில் குறிப்பிடப்பட்டிருக்கும் இந்த வாட்ச்சை பெல் அண்ட் ராஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.  வெறும் 500 வாட்ச்களை மட்டுமே அந்த நிறுவனம் தயாரித்துள்ள நிலையில், 149ஆவதாக தயாரிக்கப்பட்ட வாட்சை தான் அணிந்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். 


பிரான்சில் இருந்து இந்தியா வாங்கி இருக்கும்  ரஃபேல் போர் விமானத்தை தயாரித்த டாஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்துடன் இணைந்து இந்த வாட்சை பெ அண்ட் ராஸ் நிறுவனம் தயாரித்துள்ளதே இந்த வாட்ச்சின் இவ்வுளவு பெருமைகளுக்கும் காரணமாக கூறப்படுகிறது. விண்வெளி வீரர்கள், போர் விமானிகள்,  கண்ணிவெடிகளை அகற்றும் வல்லுநர்கள் மற்றும் உயரடுக்கு போலீஸ் அதிகாரிகள் பெல் & ராஸ் வகை வாட்ச்களை தங்கள் வேலையில் ஒரு கருவியாகப் பயன்படுத்தி வருவதாக அந்நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது. 


விலை ரூ.4.50 லட்சம்


BR 03 RAFALE  - வாட்சை பொறுத்தவரை ரஃபேல் போர் விமானங்களைக் கொண்டாடும் வகையில், டிசைன் தொடங்கி அதில் பயன்படுத்தப்படும் பொருட்கள் வரை பல்வேறு சிறப்பம்சங்களை சேர்த்து உருவாக்கிவுள்ள இந்த வாட்சை விமான பாகங்களை தயாரிக்க பயன்படுத்தப்படும் ஒரு வகை செராமிக்கைக் கொண்டு இதை உருவாக்கியிருக்கிறார்கள்.  இந்த வகை செராமிக்குகள் ஸ்டீலை விட எடை குறைவானதாகவும், அதேநேரம் வைரத்தை விட வலுவானதாகவும் இருக்கும் என கூறப்படுகிறது.  


ரஃபேல் போர் விமானத்தின் நிறத்தை ஒத்து  டிசைன் என போர் விமானத்துக்கு நெருக்கமாக இந்த வாட்ச் வடிவமைக்கப்பட்டுள்ளது.  ரஃபேல் போர் விமானத்தின் டி.என்.ஏ உங்கள் கைகளில் இருக்கிறது என இந்த வாட்சை மார்க்கெட்டிங் செய்து வருகிறது பெல் அண்ட் ராஸ் நிறுவனம். இந்த வாட்சின் விலை இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 4 லட்சத்து 50 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. மேலும்   இந்த வாட்சுக்கான் கைப்பட்டைகள் மற்றும் டூல் கிட்டுகள் ஆகியவைகளுக்கும் தனியாக விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தகக்து.