நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினராக ஆ.ராசா பதவி வகித்து வருகிறார். இவர் திமுக துணை பொதுச்செயலாளராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் ஆ.ராசாவிற்கு சொந்தமான 45 ஏக்கர் நிலத்தை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. 2004 முதல் 2007 ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சராக ஆ.ராசா பதவி வகித்தார். அப்போது ரியல் எஸ்டேட் நிறுவனத்திடம் வாங்கிய லஞ்ச பணத்தில் பினாமி பெயரில் நிலத்தை வாங்கியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் 55 கோடி ரூபாய் மதிப்பிலான 45 ஏக்கர் நிலத்தை அமலாக்கத்துறை தற்போது முடக்கியுள்ளது. இது தொடர்பாக அமலாக்கத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், அமலாக்கத் துறையின் முதற்கட்ட விசாரணையில் 2004 முதல் 2007 வரையிலான காலகட்டத்தில் குர்கிராமில் செயல்பட்டு வரும் ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்க வேண்டி இருந்தது. 


அந்த நிறுவனத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்க லஞ்சம் வாங்கியதாகவும்,  அந்த லஞ்சப்பணத்தில் முறைகேடாக கோவையில் நிலம் வாங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலம் ஆ. ராசா தொடர்புடைய பினாமி நிறுவனத்தின் மூலம் அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் பெயரில் கோவையில் நிலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த நிலம் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாகவும் அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கு முன்னதாக, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் உள்பட 16 பேர் மீது கடந்த 2015 ஆகஸ்ட் 18 ம் தேதி அன்று சிபிஐ வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்தது. அப்போது அவர்கள் ரூ. 27.97 கோடிக்கு அளவிற்கு சொத்து சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், அக்டோபர் 1999 முதல் செப்டம்பர் 2010 வரையிலான காலத்தில் அவரது வருமான ஆதாரங்களுடன் ஒப்பிடுகையில், சொத்து மதிப்பு நிலையற்ற தன்மையில் இருந்ததாக கூறப்பட்டது. இதன் காரணமாக ஆ ராசாவிடம் பல சிபிஐ அதிகாரிகள் பல மணிநேரம் விசாரணையும் மேற்கொண்டனர். 


இதையடுத்து ஊழல் தடுப்பு சட்டம் 1988 இன் கீழ் வழக்குப்பதிவு செய்த சிபிஐ, டெல்லியில் 20 இடங்களிலும், தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, பெரம்பலூர் ஆகிய இடங்களில் சோதனை நடத்தியது. ஒரே நேரத்தில் நடந்த இந்த அதிரடி சோதனையால் வருமான வரி கணக்குகள், சொத்து ஆவணங்கள், நிதிநிலை அறிக்கைகள் போன்ற ஆவணங்கள் கைப்பற்றப்பட்டனர். மேலும், 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் நடத்தப்பட்ட சோதனையின் போது கைப்பற்றப்பட்ட சில ஆவணங்களும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பு வழக்கைத் தொடங்க அடிப்படையாக அமைந்ததாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண