CM Stalin : 9 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு என்ன செய்தார் என்பதை சென்னை வரும் அமித்ஷா பட்டியலிட வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


”எதற்கும் தயாராக இருக்க வேண்டும்”


சேலம் மாவட்டம் ஐந்துரோடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக செயல் வீரர்கள் கூடடம் இன்று  நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, மாவட்ட, மாநகர, நகர, பகுதி, கிளைக் கழக செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


பின்னர், இந்நிகழ்ச்சியில்  பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ”10 ஆண்டு காலம் தமிழகத்தை பாழ்படுத்திய அதிமுகவை அகற்றி விட்டு மக்கள் நம்மிடம் ஆட்சியை கொடுத்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளில் திமுக கட்சிப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆட்சிக்கு வந்த பிறகு கட்சிப் பணிகள் மந்தமாகும் சூழ்நிலை திமுகவில் இல்லை. ஒவ்வொருவரும் உறக்கமின்றி பாடுபட்டு வருகின்றனர். நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு தானே என அலட்சியமாக இருக்க கூடாது.


பாஜக செல்வாக்கு நாளுக்கு நாள் செல்வாக்கு சரிந்து வருகிறது. அதற்காக அவர்களை எதை வேண்டுமானால் செய்வார்கள். கர்நாடக நிலை தொடர்ந்தால் முன்கூட்டியே தேர்தலை நடத்த வாய்ப்புள்ளது. எதற்கும் தயாராக இருக்க வேண்டும்” என்றார்.


 9 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு செய்தது என்ன?


தொடர்ந்து பேசிய அவர், ”அமித்ஷா சென்னை வருவது பரபரப்பு செய்திகளாக வருகிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராவது தெரிகிறது. கடந்த 9 ஆண்டுகளில் பாஜக ஆட்சியில் கொண்டு வந்த சிறப்புத் திட்டங்களை பட்டியலிட்டு சொல்ல வேண்டும். அதற்கு அமித்ஷா தயாராக இருக்கிறாரா...? மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் திமுக அங்கம் வகித்த போது ஏராளமான திட்டங்கள் தமிழ்நாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.


மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்பட்டு தற்போது 80 சதவீதம் பணிகள் நிறைவடைய திமுகதான் காரணம். மத்திய அரசின் நிதியில் 11 சதவீத நிதியை தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்த பெருமை திமுகவுக்குத்தான் உள்ளது. தமிழை செம்மொழியாக்கியது, 56 ஆயிரம் கோடி மதிப்பில் திட்டப்பணிகள் செய்யப்பட்டுள்ளது. ஒரகடத்தில் 496 கோடி மோட்டார் வாகன ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டது. 1553 கோடி மதிப்பில் சேலம் உருக்கு ஆலை சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்பட்டது.


தாம்பரத்தில் தேசிய சித்த ஆய்வு மையம், சேலத்தில் புதிய ரயில்வே கோட்டம், சேலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி, 1550 கோடி மதிப்பில் மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம், சேது சமுத்திர திட்டம், சென்வாட் வரி நீக்கம், கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், பொடா சட்டம் ரத்து, மீட்டர் கேஜ் ரயில் பாதைகள் என எண்ணற்ற பணிகளை செய்துள்ளோம். இதுபோன்றதொரு பட்டியலை உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட தயாரா...? அந்த தைரியம் ஆற்றல் அவருக்கு வருமா? வராது!என்று சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.


எய்ம்ஸ்சுக்கான பணம் ஒதுக்க மனமில்லையா?
 
மேலும், ”2015ம் ஆண்டு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதுவரைக்கும் மருத்துவமனை கட்டப்படவில்லை. அதே நேரத்தில் பல்வேறு மாநிலங்களில் அறிவிக்கப்பட்ட மருத்துவமனைகள் கட்டப்பட்டுள்ளன. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் கட்டப்படவில்லை. தமிழ்நாட்டில் ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்க மனமில்லாத ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்கு அமித்ஷா பதில் சொல்ல வேண்டும். பாஜக தமிழ்நாட்டிற்கு கொடுத்தது நீட், தமிழ் புறக்கணிப்பு, குடியுரிமை சட்டத்தின் மூலம் சிறுபான்மையினர் உரிமை பறிப்பு, இந்தித் திணிப்பு, சமஸ்கிருத திணிப்பு தான் பாஜக அரசு கொடுத்தது” என்றார் முதலமைச்சர் ஸ்டாலின்.