12 மாதங்களில் வரும் பௌர்ணமிகளில் சித்ரா பௌர்ணமி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அன்றைய தினம் அக்னி திருத்தலமான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்து மலையை கிரிவலம் செல்வது வாழ்வில் பல நல்ல பலன்களைத் தரும் என்பது நம்பிக்கை. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சித்ரா பௌர்ணமி நாட்களில் பக்தர்கள் கிரிவலம் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. இந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் கிரிவலத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  



இந்த ஆண்டுக்கான சித்திரா பௌர்ணமி இன்று அதிகாலை 2.33 மணிக்கு தொடங்கியது. அதற்கு முன்னதாகவே ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து கிரிவலம் செல்ல தொடங்கிவிட்டனர். நள்ளிரவு 12 மணிக்கு மேல் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் நகருக்குள் வர அனுமதி வழங்கப்படவில்லை. அவைகள் அனைத்தும் நகர எல்லையில் நிறுத்தப்பட்டன. அங்கிருந்து பக்தர்கள் கோவிலுக்கு நடந்து சென்றனர் ஆட்டோக்களும் இயக்கப்பட்டன. நகரமெங்கும் சிறு சிறு வியாபாரிகள் கடை அமைத்து பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். கற்பூரம் மற்றும் தண்ணீர் பாட்டில் வியாபாரம் சூடுபிடித்துள்ளது. மேலும் பக்தர்களுக்கு இலவச தண்ணீர் பந்தல் மற்றும் நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டு அவர்களின் தாகம் தணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 40 இடங்களில் அன்னதானம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.




பக்தர்கள் கூட்டத்தால் இன்று காலை திருவண்ணாமலை நகரம் திணறியது.  கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கிரிவலப் பாதையில் இடைவெளி இன்றி  அண்ணாமலையாருக்கு அரோகரா, உண்ணாமலை அம்மனுக்கு அரோகரா "என்ற பக்தி கோஷம் முழங்க பக்தர்கள் கிரிவலம் சென்று வருகின்றனர். பக்தர்கள் பாதுகாப்புக்காக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.