Ciovai Madurai Metro Rail: குறைவான மக்கள் தொகையை காரணம் காட்டி கோவை மற்றும் மதுரைக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு நிரகாரித்துள்ளது.
மத்திய அரசு நிராகரிப்பு:
வேகமான பொருளாதார வளர்ச்சிக்கு, போக்குவரத்து நெரிசல் என்பது பெரும் தடையாக உள்ளது. இதற்கான தீர்வாக சென்னை, மும்பை மற்றும் டெல்லி உள்ளிட்ட பெருநகரங்களில் மெட்ரோ ரயில் சேவை அமைந்துள்ளது. பெருநகரங்களை தாண்டி இரண்டாம் நிலை நகரங்களிலும் இந்த சேவை படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டிலும் சென்னையை தொடர்ந்து கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் சேவையை தொடங்க தமிழ்நாடு அரசு பரிந்துரைகளை வழங்கியது. ஆனால், 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இரண்டு நகரங்களிலும் 20 லட்சம் பேர் இல்லை என குறிப்பிட்டு, கோவை மற்றும் மதுரைக்கான மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரித்துள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட பல தலைவர்களும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள்:
சென்னையை தாண்டி தமிழ்நாட்டின் மிக முக்கிய நகரங்களின் பட்டியலில் கோவை மற்றும் மதுரை ஆகிய இரண்டு நகரங்களுமே உள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் இங்கு மக்கள் தொகை கணிசமாக உயர்ந்துள்ளது. அதோடு, உற்பத்தி மட்டுமின்றி ஐடி போன்ற தொழில்நுட்பத்துறையும் நல்ல வளர்ச்சி கண்டுள்ளது. இதனால், அங்கு போக்குவரத்து நெரிசல் என்பது அதிகரித்துள்ளது. மக்கள் தினசரி காலை மற்றும் மாலை வேளைகளில் பணிக்கு செல்லவும், வீடு திரும்பவும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதற்கு மெட்ரோ ஒரு சரியான தீர்வாக இருக்கும் நம்பப்படுகிறது. இந்நிலையில் இரண்டு நகரங்களுக்குமான மெட்ரொ ரயில் திட்டம் என்ன? என்பது குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.
கோவைக்கான மெட்ரோ ரயில் திட்டம்:
சென்னைக்கு அடுத்தபடியாக மெட்ரோ சேவைக்கு ஏற்ற நகரமாக 2010ம் ஆண்டே கோவை அடையாளம் காணப்பட்டது. தொடர்ந்து 2023ம் ஆண்டு இதற்கான விரிவான திட்ட அறிக்கையும் வழங்கப்பட்டது. தமிழ்நாடு அரசு வழங்கிய பரிந்துரையின்படி, கோவையில் முதற்கட்டமாக 34.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் இருப்பு பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டு இருந்தது. இதற்கு 10 ஆயிரத்து 740 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டு இருந்தது. உக்கடம் பேருந்து நிலையம் முதல் நீலம்பூரில் உள்ள விமான நிலையம் வரையில் முதல் காரிடாரும், கோயம்புத்தூர் சந்திப்பு தொடங்கி வலியம்பாளையம் பிரிவு வரையில் இரண்டாவது காரிடாரும் அமைக்க திட்டமிடப்பட்டு இருந்தது. 32 நிறுத்தங்களை உள்ளடக்கி பேருந்து நிலைம், ரயில் நிலையம் மற்றும் விமான நிலையத்தை மெட்ரோ ரயில் சேவை மூலம் ஒருங்கிணைக்கவும் முடிவு செய்யப்பட்டு இருந்தது. எதிகாலத்தில் கோவை மெட்ரோ ரயில் சேவையை மேட்டுப்பாளையம் மற்றும் திருச்சி சாலை வரை விரிவுபடுத்தவும் பரிசீலிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
மதுரைக்கான மெட்ரோ ரயில் திட்டம்
மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான விரிவான அறிக்கையை, கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசு மத்திய அரசிடம் சமர்பித்தது. அதுதொடர்பான தகவல்களின்படி, மதுரையில் முதற்கட்டமாக திருமங்கலம் தொடங்கி ஒத்தக்கடை வரையில் 32 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் சேவை திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு 11 ஆயிரத்து 366 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. திட்டத்திற்கான இருப்புப் பாதையில் 27 கிலோ மீட்டர் உயர்த்தப்பட்ட மேம்பாலம் வகையிலும், 5 கிலோ மீட்டர் பூமிக்கு அடியிலும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தம் 27 ரயில் நிலையங்கள் அமைக்க பரிசீலிக்கப்பட்டு உள்ளன. ஆனால், இந்த இரண்டு திட்டங்களுமே மத்திய அரசால் தற்போது நிராகரிக்கப்பட்டுள்ளன.
முதலமைச்சர் சூளுரை:
தமிழ்நாடு அரசின் பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்டது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான ட்விட்டர் பதிவில், “கோயில் நகர் மதுரைக்கும், தென்னிந்திய மான்செஸ்டர் கோவைக்கும் "NO METRO" என நிராகரித்துள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு. பா.ஜ.க.வைத் தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பதற்காக இப்படி பழிவாங்குவது கீழ்மையான போக்கு. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் உள்ள சிறிய இரண்டாம் நிலை மாநகரங்களுக்குக் கூட மெட்ரோ ரயிலுக்கான ஒப்புதல் வழங்கிவிட்டு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைப் புறக்கணிப்பது அழகல்ல. கூட்டாட்சிக் கருத்தியலை இப்படி சிதைப்பதைச் சுயமரியாதைமிக்க மண்ணான தமிழ்நாடு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. சென்னை மெட்ரோ பணிகளைத் தாமதப்படுத்தி முடக்க நடந்த முயற்சிகளை முறியடித்து முன்னேறினோம்.அதேபோல மதுரை & கோவையிலும் வருங்கால வளர்ச்சிக்கு இன்றியமையாத தேவையான மெட்ரோ இரயிலைக் கொண்டு வருவோம்” என ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.