தமிழகத்தில் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 


பொதுவாகவே தமிழகத்தில் ஏதேனும் விஷேச நாட்கள் வந்துவிட்டாலே பல்வேறு இடங்களில் இருந்தும் மக்கள் சொந்த ஊர்களை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துவிடுவார்கள். அதிலும் சென்னையில் இருந்து சொல்லவே வேண்டாம். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வேலை நிமித்தமாகவும் படிப்பு நிமித்தமாகவும் சென்னை சுற்றுவட்டாரப்பகுதிகளில்தான் தஞ்சம் அடைந்துள்ளனர். 


ஏதேனும் விடுமுறை கிடைத்தால் மட்டுமே சொந்த ஊர்க்கு சென்று வருகின்றனர். அந்தவகையில் தற்போது தொடர்விடுமுறை வர உள்ளது. அதாவது வார இறுதிநாட்களான சனி, ஞாயிறு, மற்றும் மிலாடி நபி வருகிறது. இதனால் தொடர் விடுமுறை எடுத்துக்கொண்டு மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகிவிட்டனர். 


இதற்காக அரசு ஒவ்வொரு முறையும் வழக்கமாக இயக்குக்கூடிய பேருந்துகள் இல்லாமல் சிறப்பு கூடுதல் பேருந்துகளையும் இயக்கி வருகிறது. 


அந்தவகையில், தற்போது அரசு விரைவுப் போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வார இறுதி நாட்கள், முகூர்த்தம், மிலாடி நபி விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து பிற இடங்களுக்கு கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இதனால் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது. 


சென்னை கிளம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூருக்கு இன்று மற்றும் நாளை 955 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 


திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூர், பெங்களூருக்கு 190 பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படுகின்றன. மாதவரத்தில் இருந்து 20 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பெங்களூர், திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கு 350 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 


பயணிகள் தங்கள் பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதுமான அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.