திருமண பத்திரிகை அடிக்க நாள் பார்த்து நட்சத்திரம் பார்த்து பூஜை செய்து பெரியவர்கள் இணைந்து சென்று வெற்றிலை, பாக்கு, பூ, பழம் வைத்து அச்சாஃபீஸ்காரருக்கு கொடுத்துவிட்டு, பின்னர் அது ரெடியாயிடுச்சான்னு கேட்டு அச்சாஃபீஸுக்கு அலையாய் அலைந்து. அதில் ப்ரூஃப் பார்த்து. கடைசியாக 4, 5 பேரு விட்டுப்போச்சுன்னு சொல்லி உள்தாள் ஒட்டச் சொல்லி அத்தனை களேபரங்கள் நடக்கும் தமிழ்நாட்டுத் திருமணங்களில்.


திருமண அழைப்பிதழில் சாமி படம், உள்ளே குலதெய்வப் பெயர் என்று நிறைய அம்சங்கள் இருக்கும். பத்திரிகை வைக்க ஒரு உறை. அந்த உறையின் நான்கு முக்கிலும் மஞ்சள் தடவி கொடுப்பார்கள். பத்திரிகை கொடுக்கச் செல்வதே ஒரு வைபவம் மாதிரி நடக்கும். குலதெய்வத்திற்கு முதல் பத்திரிகை, இரண்டாவது பத்திரிகை தாய்மாமனுக்கு என்று கொடுப்பார்கள். அப்புறம் உற்றார் உறவுகள், நண்பர்கள், ஊர்காரர்கள் என்று வரிசைக்கட்டி விநியோகிக்கப்படும். வெளியூருக்கு என்று ஒருசில நாள் ஒதுக்கி பயணப்படுவார்கள். ஆனால் இப்போ காலம் மாறிப்போச்சு அழைப்பிதழ்களை கூரியர்களில் அனுப்பிவிட்டு வாட்ஸ் அப்பில் வாங்க என்று மெசேஜ் தட்டிவிடுகிறார்கள்.


சரி அதுதான் இப்படி என்றால் பத்திரிகைகளைப் பார்த்தால் இன்னும் பகீர் என்கிறது. வசதிக்கேற்ப பத்திரிகையின் தரத்தைக் கூட்டிவந்த காலமும் இருந்தது. இப்போதெல்லாம் இம்ப்ரோவைஷ் பண்றோம், கஸ்டமைஸ் பண்றோம், ஸ்பெஷிபிகேஷன் என்ற பெயரில் என்னென்னவோ நடக்கின்றன.


அப்படியொரு வித்தியாசமான திருமணப் பத்திரிகை இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. அந்தப் பத்திரிகை மாத்திரை அட்டை மாதிரி இருக்கு. அட ஆமாங்க நம்ம சில்வர் கலர் அட்டை இருக்கும்ல. பின்னாடிகூட யாரு தயாரிச்சது, எப்ப தயாரிச்சாங்க, எத்தனை ஆண்டுகள் பயன்படுத்தலாம் என்றெல்லாம் தகவல் இருக்கும்ல அதே மாதிரி பத்திரிகை தயார் செய்திருக்காங்க.


அந்தப் பத்திரிகையில் மணமகன், மணமகள் பெயர். அவர்கள் பெற்றோர் பெயரை மேனுஃபேக்சர்ஸ் என்று குறிப்பிட்டு பதிவு செய்துள்ளாங்க. பையனோட அப்பாரு மருந்துக்கடைக்காரர். பையனும் ஃபார்மஸி தான் படிச்சிருக்கிறாரு. பொண்ணும் நர்சிங் கல்லூரியில் பணி புரியுறாங்க. அதான் கூட்டிக் கழிச்சுப் பார்த்து இந்த டிசைனில் பத்திரிகை அடிச்சிருக்காங்க. அப்புறம் மாத்திரையின் உள்ளடக்கம் விவரிப்பது மாதிரி மணமக்களின் பெயரின் கீழ் உள்ளடக்கம் என்று போட்டு இருவரின் படிப்பையும் பதிவிட்டுள்ளனர்.


மணமகன் பெயர் பா.எழிலரசன் எம் ஃபார்ம் படிச்சிருக்கிறார். ஃபார்மஸி கல்லூரியில் இணை பேராசிரியர்.
அப்புறம் மணமகள் பெயர் ம.வசந்தகுமாரி எம்எஸ்சி நர்சிங் படித்துவிட்டு நர்சிங் கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறார். மணமகனுக்கு ஊரு திருவண்ணாமலை. மணப்பெண்ணுக்கு ஊரு ஜிஞ்சி.


வார்னிங் என்று மருந்து அட்டையில் போட்டிருக்க மாதிரி இங்கேயும் ஸ்மைலி போட்டு வார்னிங் போட்டுள்ளார்கள். அதில், மறக்காமல் எல்லோரும் திருமணத்திற்கு வந்துவிடுங்கள் என்று சிவப்பு எழுத்தில் பதிவு செய்துள்ளார்கள். 


அப்புறம் முழுக்க சிவப்பு நிறத்திலான பெட்டியில் சில குறிப்புகள் உள்ளன. அதில் திருமணம் நடைபெறவுள்ள செப்டம்பர் 5ல் ஆசிரியர் தினம், அன்னை தெரசா நினைவு தினம், விஓசி பிறந்தநாள் ஆகியன வருவதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
மொத்தத்தில் வித்தியாசமா கொஞ்சம் டெரரா ஒரு பத்திரிகையை ரெடி செய்திருக்கிறார்.