2024 பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில், பாஜக 26 எம்.பி தொகுதிகளை வெல்லும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழ் நாட்டில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், பால் விலை உயர்வு, மின்சார கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வைக் கண்டித்து தமிழ் நாடு முழுவதும் 1,114 இடங்களில் போராட்டம் நேற்று நடைபெற்றது. பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் ஈரோடு மாவட்டம் அந்தியூரில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசுகையில், ”சென்னையில் மக்கள் மழை வெள்ளத்தால் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கின்றனர். மேலும், வீட்டை விட்டு வெளியே வந்து கடைக்குச் சென்று அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியாத அவதியில் இருக்கின்றனர். பொது மக்கள் ஒரு டீ குடிக்க வழியில்லாமல் தவித்து வரும்போது முதல்வர் தனது குடும்பத்துடன் இந்த வாரம் ரிலீஸ் ஆன திரைப்படத்தினை ரசித்து வருகிறார். மேலும் அவர் பேசுகையில் கடந்த 16 மாத திமுக ஆட்சியில் சாதனை என்பது விலைவாசி உயர்வாகத்தான் இருக்கிறது. அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் பால் கொள்முதல் விலையை ரூ. 3 உயர்த்திவிட்டு, பால் விற்பனை விலையை 12 உயர்த்தியதுதான் திமுக ஆட்சியின் சாதனையாக உள்ளது. பாஜக ஆட்சி செய்யும் குஜராத்தில் செயல் படும் அமுல் கூட்டுறவு நிறுவனம், தனது வருமானத்தில் 82% பங்குகளை குஜராத் மாநிலத்தில் உள்ள விவசாயிகளுக்கு வழங்குகிறது. வேண்டுமானால் தமிழ் நாட்டில் உள்ள அமைச்சர்களை பாஜக தனது சொந்த செலவில் அழைத்துச் சென்று அமுல் நிறுவனம் எப்படி இலாபகரமான முறையில் செயல்படுகிறது என்பதை காட்ட நாங்கள் தயாராக உள்ளோம்.
அதேபோல், கடந்த ஆண்டு நாள் ஒன்றுக்கு 36 லட்சம் லிட்டர் பாலை கொள்முதல் செய்து வந்த ஆவின் தற்போது 4 லட்சம் லிட்டர் குறைவாக கொள்முதல் செய்கிறது. அதாவது நாள் ஒன்றுக்கு 32 லட்சம் லிட்டர் அளவுக்கு மட்டுமே கொள்முதல் செய்கிறது. ஆனால், அமைச்சர் நாசர் நாள் ஒன்றுக்கு 43 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுவதாக பொய் கூறுகிறார். திவால் ஆன ஆவின் நிறுவனத்தினை கமிஷனுக்காக நடத்தி வருகின்றனர்.
மேலும், ஒவ்வொரு துறையிலும் உள்ள அமைச்சர்கள் தங்களால் முடிந்த அளவுக்கு விலைவாசியை உயர்த்தி மக்களை வஞ்சித்து வருகின்றனர். ஆனால் முதல்வரோ விலைவாசியை உயர்த்தும் அமைச்சர்களை போட்டி போட்டு பாராட்டி வருகிறார். மக்களவைத் தேர்தல் வரை இதுபோன்ற போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறும். பாரதிய ஜனதா கட்சி எதிர்வரும் 2024ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தமிழ் நாட்டில் மட்டும் 26 இடங்களை வெல்லும்” எனவும் பேசியுள்ளார்.