தமிழக நிதி அமைச்சர் ஆக்ஸிஜன் இணைப்பு குழாய்களை பொருத்தும் புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
கொரோனா நோய்தொற்றின் அலை வேகமாகப் பரவிவருகிறது. முதல் அலையைவிட இரண்டாவது அலையில் உயிரிழப்பு அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் பெரும்பாலானோருக்கு ஆக்ஸிஜன் உதவி தேவைப்படுகிறது. ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் டெல்லி உள்ளிட்ட, வடமாநில மருத்துவமனைகளில் உயிரிழப்புகள் அதிகரித்துவருகின்றன. இதே நிலை தமிழகம் உட்படப் பல மாநிலங்களிலுள்ள மருத்துவமனைகளிலும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது.
இந்தியாவில் ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் தட்டுப்பாட்டை சரிசெய்யவும், தடுப்பூசி தயாரிப்பை வேகப்படுத்த திருச்சியில் உள்ள பெல் நிறுவனத்தில் ஆக்ஸிஜன் தயாரிக்கும் பணியை மேற்கொள்ளவும், அதேபோல் செங்கல்பட்டு பகுதியில் செயல்பட்டுவரும் (ஹெச்.எல்.எல்) பயோடெக் நிறுவனத்தில் கொரோனா தடுப்பூசி தயாரிப்பை மேற்கொள்ளவும் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என, உயர்நீதிமன்ற கிளையில் மதுரையை சேர்ந்த வெரோனிகா மேரி மனுத்தாக்கல் செய்துள்ளார். இவ்வாறான சூழலில் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆக்ஸிஜன் டேங்கர் லாரிகள் மூலம் கொண்டுவரப்படுகிறது.
இந்நிலையில் தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பொருந்தாத ஆக்ஸிஜன் இணைப்புகளை சரி செய்யும் புகைப்படம் சமூக வளைதளங்களில் அதிகம் பகிரப்பட்டுவருகிறது. இது குறித்து திமுகவினர் சிலர் நம்மிடம் "தமிழகத்திற்கென 80 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டு அதில் மதுரைக்கு 15 மெட்ரிக்டன் கடந்த 17-ம் தேதி இரவு 9 மணியளவில் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் முன்னிலையில் அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தது. தமிழகத்திற்கு தேவையான 80 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் எங்கிருந்து யாரால் எப்படி கொண்டு வரப்பட்டது என்று இதுவரை யாரும் வெளிப்படையாக தெரியவில்லை. மதுரைக்கு தேவையான திரவ ஆக்ஸிஜன் வந்தபோது அதனை ஆக்ஸிஜன் பிளாண்டுகளில் நிறைத்துக்கொள்ள முயற்சி மேற்கொண்டபோது பைப் லைன்கள் பொருந்தவில்லை. அப்போது நிதியமைச்சர் களத்தில் இறங்கி இயந்திரங்களை சரியாக பொருத்திக் கொடுத்தார். அவர் ஒரு கெமிக்கல் இஞ்ஜினியர் என்பதால் அந்த சமயத்தில் அவரால் உதவ முடிந்தது” என்றனர்
இந்த புகைப்படம் தற்போது சமூக வளைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. தமிழகத்திற்கு 80 மெட்ரிக் டன் ஆக்சிஜன் நிதியமைச்சரின் முயற்சியால் வந்துள்ளதை அவரே சூசகமாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ’உதவிய புலம்பெயர் தமிழர்களுக்கு நன்றி’ என்று மட்டும் ட்வீட் போட்டுள்ளார். எனினும் எங்கிருந்தது ஆக்ஸிஜன் வந்தது என்பது குறிப்பிடவில்லை” என்றனர். இது குறித்து அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனிடம் கேட்டபோது...," இது குறித்து என்னிடம் கேட்கவேண்டாம் தகவல்கள் தற்போது கொடுக்கப்போவதில்லை என போனை கட் செய்துகொண்டார்.