தருமபுரி மாவட்டம், அரூர் டவுன் பஞ்சாயத்துக்குட்பட்ட நாசன்கொட்டாய்யை சேர்ந்த தமிழ்குமரன், நவநீதம் தம்பதியரின் மகள் கவிநிலவு, உக்ரைனில் உள்ள ஸ்விம்மி பல்கலை கழகத்தில் 2ஆம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார். தற்போது, உக்ரைன், ரஷியா இடையே நடைபெற்று வரும் போரால், உக்ரைன் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது. ரஷ்யா குண்டு மழையால் ஸ்விம்மியில் ரயில் போக்குவரத்து பாதை சேதமடைந்துள்ளது. இதனால் இந்தப் பகுதியில் இருந்து இந்திய மாணவிகள் வெளியேற முடியாமல் தவித்து வந்தனர். மத்திய அரசின் முயற்சியால் இறுதியாக அந்த பகுதியில் இருந்த மாணவ, மாணவிகள் இந்தியா திரும்பி சொந்த ஊருக்கு வந்தடைந்தனர்.
தொடர்ந்து சொந்த ஊர் திரும்பிய மாணவியிடம், பெற்றோர்கள் போர் சம்பவம் குறித்து கேட்டறிந்தனர். மேலும் ரஷ்ய குண்டு வீச்சில் ரயில் பாதை துண்டிக்கப்பட்டு வெளியேற முடியாமல் தவித்து வந்துள்ளனர். தொடர்ந்து மாணவர்கள் பதுங்கியிருந்த இடத்தில் அருகில் உள்ள, கெமிக்கல் பேக்டரி மீது குண்டு வீசியதில் மின்சாரம் பாதித்து தண்ணீர் இன்றி தவித்துள்ளனர். இதனால் பனிப்பொழிவில் பாத்திரத்தின் மூலம் பனிக்கட்டியை சேகரித்து அதை சூடு படுத்தி அதன் தண்ணீரை பயன்படுத்தியுள்ளனர். சில இடங்களில் இருந்த மாணவர்கள் அவர்களாகவே தப்பித்து, உணவின்றி வெளியேறி வந்துள்ளனர்.
ஆனால் ஸ்விம்மி பகுதியில் இருந்த மாணவர்களை இந்திய தூதரகம் மூலம் பேருந்து போல்ட்டோ நகருக்கு அழைத்து வந்து அங்கிருந்து ரயில் மூலம் லெவியூ அழைத்து வந்துள்ளனர். பின்னர் போலந்து நாட்டுக்கு அழைத்துச் சென்று, அங்கிருந்து பிளைட்டில் டெல்லியும் பின்னர் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வந்தடைந்துள்ளனர். இந்த மாணவர்களை பாதுகாப்பாக அனைத்து வசதிகளுடன், மத்திய, மாநில அரசே அழைத்து வந்துள்ளது. மேலும் வரும் வழியில் உக்ரைன் நாட்டில் தன்னார்வலர்கள் தண்ணீர், பிஸ்கட் உள்ளிட்டவை கொடுத்துள்ளனர். தொடர்ந்து பாதுகாப்பாக வந்ததற்கு நடவடிக்கை எடுத்த மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்து போர் நடந்து வருவதால், மீண்டும் மருத்துவ படிப்பை தொடர முடியுமா என்ற அச்சம் எழுந்துள்ளது. அதனால் உக்ரைனில் மருத்துவம் படிக்கும் மாணவர்கள் படிப்பை தொடர, போதிய பாதுகாப்பை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும். இலலையென்றால் இந்தியாவிலேயே எங்களுக்கு மருத்துவம் படிக்க ஏற்பாடு செய்து கொடுக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவ மாணவி அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.