செம்பரம்பாக்கம் ஏரியில் நண்பர்களுடன் சுற்றி பார்க்க வந்த இரண்டு மாணவர்கள் ஏரியில் மூழ்கி  உயிரிழந்ததும், அவர்கள் நீட் தேர்வு தேர்ச்சி பெற்று அரசு மருத்துவ கல்லூரியில் சேர இருந்த நிலையில் இறந்ததும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

செம்பரம்பாக்கம் ஏரி ( chembarambakkam lake )

 

சென்னை போரூர் அடுத்த அய்யப்பன்தாங்கல், சீனிவாசபுரம், இரண்டாவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் குரு இவரது மகன் ரிஷிகேஷ் (18), விருகம்பாக்கம், லோகையா காலனியை சேர்ந்தவர் அரிஷ் (18), இருவரும் இவர்களது நண்பர்களான சென்னை மாங்காட்டை சேர்ந்த ரிஸ்வான்(18), சாம்(18), ஆகிய நான்கு பேரும் நேற்று செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றி பார்க்க மோட்டார் சைக்கிளில் வந்தனர். 

 


உடல்நிலை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர்


 


சுற்றிப் பார்க்க வந்த நண்பர்கள்

 

செம்பரம்பாக்கம் ஏரிக்கரையின் மீது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு ஏரியை சுற்றி பார்த்து கொண்டிருந்தனர் . அப்போது ரிஷிகேசும், அரிசும் செம்பரம்பாக்கம் ஏரியின் நான்காவது மதகின் கீழே இறங்கி நீரில் கால்களை விட்டு நனைத்து கொண்டிருந்தபோது திடீரென நிலை தடுமாறி இருவரும் ஏரியில் தவறி விழுந்து நீரில் மூழ்கினார்கள்.

 

கால் தவறி ஏரியில்..

 

இதனை கண்டதும் அவரது நண்பர்கள் அவர்களை மீட்க முயன்றும் முடியாமல் கூச்சல் போட்டனர். இருப்பினும் நீரில் மூழ்கியவர்களை மீட்க முடியாததால்,  இது குறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விபத்து குறித்து தகவல் அறிந்து குன்றத்தூர் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

 


கதறி அழும் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள்


தகவல் அறிந்ததும் பூந்தமல்லி மற்றும் ஆவடி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நீரில் மூழ்கி கிடந்த ரிஷிகேஷ் மற்றும் ஹரீஷ் ஆகிய இருவரின் உடல்களையும் இறந்த நிலையில் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

 

உடல்களை மீட்டு போலீஸ்

 

குன்றத்தூர் போலீசார் நடத்திய விசாரணையில்,  இருவரும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று நீட் தேர்வும் தேர்ச்சி பெற்ற நிலையில் ரிஷிகேஷ் ஊட்டி அரசு மருத்துவ கல்லூரியிலும், ஹரிஷ் கவுன்சிலிங் முடித்து விட்டு கல்லூரிக்காக காத்திருந்ததாகவும் தெரியவந்தது. இருவரும் மருத்துவ கல்லூரியில் சேர்ந்து மருத்துவ படிப்பை தொடங்க இருந்த நிலையில், நண்பர்களுடன் சேர்ந்து ஏரியை சுற்றி பார்க்க வந்தபோது ஏரியில் மூழ்கி இருவரும் இறந்து போன சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

 

தொடரும் சோகம் - போலீஸ் எச்சரிக்கை

 

செம்பரம்பாக்கம் ஏரியில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அவப்பொழுது சுற்றி பார்க்கச் செல்லும் பொழுது, இது போன்ற விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் அடிக்கடி நடந்து கொண்டிருக்கிறது. இனி இது போன்ற சோக சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தொடர் கண்காணிப்பு தேவை என பொதுமக்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர். தடை செய்யப்பட்ட நீர் நிலையை அருகே செல்வதும், நீச்சல் தெரிந்தவர்களாக இருந்தாலும்,  பாதுகாப்பற்ற நீர் நிலைகளில் இறங்கி குளிப்பது ஆகியவை ஆபத்தை விளைவிக்கும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.