ஒட்டுமொத்த நாட்டையுமே சோகத்தில் மூழ்கடித்துள்ளது வயநாடு நிலச்சரிவு துயரம். கேரள மாநிலத்தின் முக்கிய நகரமான வயநாட்டில் நிகழ்ந்த இந்த நிலச்சரிவு காரணமாக இதுவரை 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கான நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், நிலச்சரிவில் சிக்கிய 200-க்கு மேற்பட்டோர் பேரின் நிலை என்னவென்று இதுவரை தெரியவில்லை.
குடும்பம், குடும்பமாக உயிரிழந்த தமிழர்கள்:
வயநாட்டில் ஏற்பட்ட சோகம் கேரளம் மட்டுமின்றி அண்டை மாநிலமான தமிழ்நாட்டு மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த சூழலில், துயரத்தில் உள்ள தமிழக மக்களுக்கு பேரிடியாக இந்த துயரச் சம்பவத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும் உயிரிழந்திருக்கின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே 3 பேர் உயிரிழந்த தகவல் வந்த நிலையில், தற்போது உயிரிழப்பு எண்ணிக்கை கூடுதலாக தெரிகிறது.
இந்த நிலச்சரிவில் சூரல்மலை, மேப்பேடு மற்றும் முண்டக்கை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சூரல்மலையில் சடலமாக மீட்கப்பட்டவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சடலமாக மீட்கப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் அனைவரும் கோவை மாவட்டம் வால்பாறையைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
உயிரிழப்பு அதிகரிக்கும் அஞ்சம்:
தேயிலைத் தோட்ட தொழிலாளர்களாக அவர்கள் அங்கு வசித்து வந்த நிலையில், இந்த துயர சம்பவம் அரங்கேறியுள்ளது. சூரல்மலையில் தற்போது 6 தமிழர்கள் உயிரிழந்த நிலையில், மேலும் குன்னூரைச் சேர்ந்த ஒரு பெண் உயிரிழந்திருப்பதும் தெரியவந்துள்ளது.
வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்த தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. தொடர்ந்து இரண்டாவது நாளாக மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மீட்பு பணியில் ராணுவம், விமானப்படை ஈடுபட்டு வருகின்றனர். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே இந்த சம்பவத்தில் உயிரிழந்த நீலகிரி மாவட்டம் பந்தலூரைச் சேர்ந்த கல்யாண்குமாரின் குடும்பத்திற்கு ரூபாய் 3 லட்சம் இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அடுத்தடுத்து நிவாரணங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.