பாதுகாப்பு கருதி சாலைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில், விபத்துக்களும், திருட்டு சம்பவங்களும் அதிகளவில் சிக்கி வரும் சூழலில், அவ்வப்போது மனிதாபிமான சில நிகழ்வுகளும் பதிவாகி நம்மை நெகிழ வைக்கிறது.
இந்த நிலையில், நித்யா என்ற டுவிட்டர்வாசி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோ பார்ப்பவரை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. அந்த வீடியோவில், சாலை ஓரத்தில் உள்ள நடைபாதையில் வயதான மூதாட்டி ஒருவர் இந்த தள்ளாத வயதிலும் காய்கறிகளை விற்பனை செய்து வருகிறார். அந்த மூதாட்டி காலை நேரத்தில் சாப்பிடுவதற்காக தான் கொண்டு வந்திருந்த சாப்பாட்டை எடுத்துக்கொண்டு அருகில் அமர்ந்து சாப்பிட செல்கிறார். ஆனால், துரதிஷ்டவசமாக அந்த பாட்டியின் சாப்பாடு கீழே கொட்டி விடுகிறது.
இதனால், அதிர்ச்சியடைந்த அந்த மூதாட்டி வேதனையுடன் அந்த பாதையில் செல்பவர்களை எல்லாம் பார்க்கிறார். ஆனால், அவரது சாப்பாடு கீழே கொட்டியதை பார்த்துக்கொண்டே ஒருவர் நடந்து செல்கிறார். இரு சக்கர வாகனங்களிலும், கார்களிலும் மற்றவர்கள் விரைந்து செல்கின்றனர். இதனால், விரக்தியடைந்த அந்த பாட்டி தான் கீழே கொட்டிய சாப்பாட்டை மீண்டும் மண்ணில் இருந்து எடுத்து தனது டிபன் பாக்சிலே எடுத்து போடுகிறார்.
அப்போது, இதை எல்லாம் சாலையின் எதிரே இருந்து பார்த்துக் கொண்டிருந்த பள்ளி படிக்கும் சிறுவன் ஒருவன் அந்த பாட்டியை நோக்கி நேராக வருகிறான். அவ்வாறு வந்த அவன் தனது பள்ளிப்பையை கழட்டி உள்ளே இருந்து ஏதோ எடுக்கிறான். மேலும், பாட்டியை அழைத்து கீழே விழுந்த சாப்பாட்டை சாப்பிட வேண்டாம் என்று கூறி, தனது பையில் இருந்து தனது சாப்பாடு டிபன் பாக்சை கொடுக்கிறான். தனது டிபன் பாக்சை பிரித்து அதில் உள்ள சாப்பாட்டை கொடுத்து, பாட்டியிடம் இதை சாப்பிடுங்கள் என்று கூறுகிறான்.
கொண்டு வந்த சாப்பாடு கீழே கொட்டியதால் வேதனையில் இருந்த பாட்டி, திடீரென வந்த சிறுவன் அளித்த சாப்பாட்டை பார்த்து மகிழ்ச்சியுடன் வாங்கிக்கொண்டதுடன், அந்த பள்ளிச்சிறுவனை வாஞ்சையுடன் கொஞ்சி அவனது தலையில் தனது கையை வைத்து ஆசிர்வாதம் செய்தார். இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
இந்த வீடியோவிற்கு கீழே பலரும் அந்த சிறுவனின் செயலை வாழ்த்தியும், பாராட்டியும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். கமல்ஹாசனின் படத்தில் அந்த மனசுதான் சார் கடவுள் என்று ஒரு வசனம் வரும். காலையில் பள்ளிக்கு செல்லும் அந்த மாணவன்( அதிகபட்சம் 3 அல்லது 4ம் வகுப்பு படிக்க வாய்ப்பு) தனது சாப்பாட்டை பாட்டிக்கு கொடுத்தது பார்ப்பவர் பலரது கண்களையும் கண்கலங்க வைத்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்