வங்கக்கடலில் கடந்த 9-ந் தேதி உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது மணிக்கு 16 கி.மீ. வேகத்தில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, சென்னைக்கு அருகே நேற்று மாலை 5.30 மணியளவில் கரையை கடக்கத் தொடங்கியது. சுமார் 1 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது.


பின்னர், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலு குறைந்து மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து சென்றது. அப்போது சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இரவு முழுவதும் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் வீசியது.




வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே நேற்று கரையை கடந்தது. இதன் தாக்கத்தால் இன்று மற்றும் நாளை நீலகிரி, கோவை, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.


சென்னையில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னைக்கு விடப்பட்டிருந்த அதிகனமழைக்கான ரெட் அலர்ட் நேற்று விலக்கிக் கொள்ளப்பட்டது. வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி கடந்த அக்டோபர் 1 முதல் நவம்பர் 11-ந் தேதி வரை வழக்கமாக் 26 செ.மீ. மழை கிடைக்கும். ஆனால், இந்தாண்வு 40 செ.மீ. மழை கிடைத்துள்ளது. இது வழக்கத்தைவிட 54 சதவீதம் அதிகம்.




சென்னையில் இந்த காலகட்டத்தில் வழக்கமாக 42 செ.மீ. மழை பெய்யும். இந்தாண்டு 74 செ.மீ. மழை கிடைத்துள்ளது.இது வழக்கத்தைவிட 77 சதவீதம் அதிகமாகும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று முன்தினம் மாலையில் இருந்தே பலத்த காற்றுடன் கனமழை பெய்து வந்தது. நேற்று காலை நிலவரப்படி 3 இடங்களில் அதிகனமழையும், 23 இடங்களில் மிக கனமழையும், 21 இடங்களில் கனமழையும் பெய்தது. இன்று  கனமழை அபாயம் உள்ளதால் தமிழ்நாட்டில் உள்ள 10 மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 


குறிப்பாக, தலைநகர் சென்னையில் தி.நகர், கொளத்தூர், வியாசர்பாடி, தண்டையார்பேட்டை, கோடம்பாக்கம், அமைந்தகரை, அரும்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மழைநீர் வெள்ளம்போல சூழ்ந்துள்ளது. இதனால், பல பகுதிகளில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து வீடுகளுக்குள் புகுந்துள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர