Waqf Amendment Bill: வக்பு வாரிய திருத்த மசோதா மீதான வாக்கெடுப்பில் மொத்தமாக 125 எம்.பிக்கள் ஆதரவாக வாக்களித்தனர்.
மாநிலங்களவையில் நிறைவேறிய வக்பு மசோதா:
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மாநிலங்களவையிலும் வக்பு வாரிய திருத்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. நண்பகலில் தொடங்கி நள்ளிரவு வரை விவாதம் காரசாரமாக நீண்டது. 12 மணி நேர விவாதத்திற்குப் பிறகு நள்ளிரவு சுமார் 2 மணி அளவில் மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் மசோதாவிற்கு ஆதரவாக 128 எம்.பிக்களும், எதிராக 95 எம்.பிக்களும் வாக்களித்தனர். அதன் மூலம், மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையிலும் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து, விரைவில் குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற்ற பிறகு, புதிய வக்பு வாரிய திருத்த மசோதா நடைமுறைக்கு கொண்டுவரப்பட உள்ளது.
தமிழ்நாடு எம்.பிக்களின் நிலைப்பாடு:
மாநிலங்களவையில் தற்போது பாஜக கூட்டணி, எதிர்க்கட்சிகளின் கூட்டணி, எந்த கூட்டணியை சாராத கட்சி மற்றும் சுயேச்சை எம்பிக்கள் என மொத்தம் 236 உறுப்பினர்கள் உள்ளனர். வாக்கெடுப்பில் பாஜக கூட்டணியை சேர்ந்த 125 பேரும் மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்தனர். அதில் மசோதாவிற்கு கடும் எதிர்ப்பை தெரிவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜி.கே. வாசனும் அடங்குவார். பாமக தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி வாக்கெடுப்பில் பங்கேற்காமல் நடுநிலை வகித்துள்ளார். அதேநேரம், திமுக மற்றும் அதிமுகவைச் சேர்ந்த ஒட்டுமொத்த எம்.பிக்களும் வக்பு வாரிய திருத்த மசோதாவிற்கு எதிராக வாக்களித்துள்ளனர்.
அதிமுகவின் நிலைப்பாடு:
வக்பு மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டப்பேரவையில் நேற்று திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து இருந்தனர். அதிமுக உறுப்பினர்களுக்கும் அந்த பேட்ஜ் வழங்கப்பட்டது. ஆனால், அதனை அணிய மறுத்துவிட்டனர். இந்நிலையில் தான் மாநிலங்களவையில் மசோதாவிற்கு எதிராக வாக்களித்துள்ளனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் தான் டெல்லியில் அமித் ஷாவை சந்தித்தார். இதன் மூலம் 2026 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் அதிமுக - பாஜக கூட்டணி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தான் அக்கட்சிக்கு எதிரான திமுக அரசின் நிலைப்பாட்டில் அதிமுக பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.
அன்புமணியின் இரட்டை நிலைப்பாடு?
மாநிலங்களவை உறுப்பினரான அன்புமணி ராமதாஸ் அவை நடவடிக்கைகளில் பெரிதும் பங்கேற்பதில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. இந்நிலையில் தான், மிக முக்கிய மசோதா மீதான வாக்கெடுப்பிலும் அவர் பங்கேற்கவில்லை. வக்பு மசோதா குறித்து பேசிய பாமக நிறுவனம் ராமதாஸ், ”வக்பு வாரிய திருத்த சட்டத்தை பாமக ஆதரிக்கவில்லை. அதனால் தான் தமிழக அரசின் தீர்மானத்தை பாமக உறுப்பினர்கள் ஆதரித்துள்ளனா்” என பேசினார். பாமகவின் நிலைப்பாடு அறிவிக்கப்பட்ட பிறகும் அன்புமணி இந்த வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. காரணம் எதிர்வரும் தேர்தல்களிலும் பாஜகவுடன் சேர்ந்து பயணிக்கவே அன்புமணி விரும்புவதாகவும், கூட்டணி கட்சிக்கு நெருக்கடி ஏற்படுத்த வேண்டாம் என்பதற்காகவுமே அவர் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.