Pamban Bridge: ஆச்சரியத்தின் புதிய உச்சமாக கட்டப்பட்டுள்ள, புதிய பாம்பன் பாலத்தை வரும் 6ம் தேதி பிரதமர் மோடி திறந்துவைக்கிறார்.
பாம்பன் பாலம்:
கடலின் குறுக்கே நீண்டு, ராமேஸ்வரம் எனும் நிலப்பகுதியை இந்தியாவின் பிரதான பரப்புடன் இணைக்கும், ரயில்கள் மற்றும் கப்பல்கள் இரண்டும் கடந்து செல்லும் இயற்கை காட்சியுடன், புதிய பாம்பன் பாலம், ராம நவமி அன்று (ஏப்ரல் 6) பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட உள்ளது.
கட்டுமானத்தில் தனிக்கவனம்:
நூற்றாண்டு பழமையான பாம்பன் பாலத்தை மாற்றாக புதிய பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முதல் செங்குத்து லிஃப்ட் ரயில்வே கடல் பாலம் என்ற பொறியியல் சிறப்பு அந்தஸ்தும் இதற்கு உண்டு. துருப்பிடிக்காத எஃகு வலுவூட்டல்கள் மற்றும் பாலிசிலோக்சேன் பெயிண்ட் மூலம் கட்டப்பட்ட இந்தப் பாலம், கடுமையான கடல் நிலைமைகளைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த் அபாலம் 58 ஆண்டுகள் தாக்குப்பிடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள தானியங்கி எலக்ட்ரோ-மெக்கானிக்கல் லிஃப்ட் அமைப்பு, பாலத்தை 17 மீட்டர் உயரத்திற்கு உயர்த்த உதவும். அதன்படி, அந்த வழியில் கப்பல் பயணிக்க முடியும்.
1964 ஆம் ஆண்டு ஏற்பட்ட பயங்கரமான சுனாமியின் போதும், பயணிகள் நிறைந்த ரயில் அடித்துச் செல்லப்பட்டபோதும் பழைய பாலம் உறுதியாக நின்றது. ரயில்வே அதிகாரிகளின் கூற்றுப்படி, புதிய பாலம் ரயில்வேயின் பொறியியல் திறமைக்கு ஒரு சான்றாகும், மேலும் இந்தியாவின் உள்கட்டமைப்பின் அளவுகோலை உயர்த்தியுள்ளது.
புதிய பாம்பன் பாலத்தின் அம்சங்கள்:
பழைய பாலம் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக வர்த்தகம் மற்றும் புனித யாத்திரைக்கான பயணத்தில் முக்கிய பங்கு வகித்தது. கடல் அரிப்பு, அதிக பராமரிப்பு மற்றும் செயல்பாட்டு சவால்கள் காரணமாக, புதிய பாம்பன் பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டு, 2019 இல் புதிய பாலத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
2.08 கிலோமீட்டர் நீளமுள்ள புதிய பாலமானது பழைய பாம்பன் பாலத்தை விட மூன்று மீட்டர் உயரத்தில் உள்ளது. இது சிறிய கப்பல்கள் பாலத்தை உயர்த்தாமலேயே அதன் கீழே செல்ல அனுமதிக்கிறது. ரயில்வே அமைச்சகத்தின் கூற்றுப்படி, இந்தப் பாலம் ஒவ்வொன்றும் 18.3 மீட்டர் கொண்ட 99 ஸ்பான்களுடன் கட்டப்பட்டுள்ளது. அதன் மையத்தில் 72.5 மீட்டர் செங்குத்து லிப்ட் அகலம் உள்ளது. இது தேவைப்படும்போது பெரிய கப்பல்களை பயணிக்க ஏதுவாக 17 மீட்டர் வரை உயர்த்தப்படலாம். இந்தப் பாலம் இரட்டை ரயில் பாதைகளுடன் வடிவமைக்கப்பட்டு 333 பைல்கள் (PILES) மற்றும் 101 PILES கேப்களுடன் கட்டப்பட்டுள்ளது. இது கனரக சரக்கு ரயில்கள் மற்றும் வந்தே பாரத் போன்ற மேம்பட்ட செமி - ஹைஸ்பீட் ரயில்கள் அதன் வழியாகச் செல்ல அனுமதிக்கும்.
பழைய பாம்பன் பாலம்:
பழைய பாம்பன் பாலத்தின் கட்டுமானப் பணிகள் 1911 ஆம் ஆண்டு தொடங்கி 1914 ஆம் ஆண்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இது இந்தியாவின் முதல் கடல் பாலமாகும், இது வர்த்தகத்திற்காக கட்டப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சியின் அந்த நாட்களில், பாம்பன் அல்லது ராமேஸ்வரம் தீவின் தென்கிழக்கு முனையில் உள்ள தனுஷ்கோடி மற்றும் இலங்கையில் உள்ள தலைமன்னார் ஆகிய இரண்டு துறைமுகங்களுக்கு இடையே தான் கப்பலகள் இயங்கின. 1964 ஆம் ஆண்டு சுனாமியின் போது, தனுஷ்கோடி பேரழிவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது பழைய பாலத்தில் டபுள் லீஃப் பாஸ்குல் பிரிவு இருந்தது. இது ஷெர்ஸர் ரோலிங்-டைப் லிஃப்ட் ஸ்பான் உடன் கப்பல்கள் கடந்து செல்லும் வகையில் உயர்த்தப்பட்டது. இது ஒரு தொழில்நுட்ப அற்புதமாகக் கருதப்படுகிறது. 2010 இல் பாந்த்ரா-வொர்லி கடல் இணைப்பு திறக்கப்படும் வரை இது இந்தியாவின் மிக நீளமான கடல் இணைப்பாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
1964 புயலும், பேரழிவும்..!
தனுஷ்கோடி, இந்திய-இலங்கை போக்குவரத்திற்கான ரயில் நிலையமாக இருந்தது. அங்கிருந்து தெற்கு ரயில்வேயால் இயக்கப்படும் நீராவி கப்பல் இலங்கையில் உள்ள தலைமன்னாருக்குக் இயக்கப்பட்டது. இந்நிலையில் தான் டிசம்பர் 23, 1964 அன்று இரவு, ஒரு கடுமையான கடல் அலை அல்லது சுனாமி பாம்பன் தீவை மிகவும் மோசமாகத் தாக்கியது. இதனால் பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த பாம்பன்-தனுஷ்கோடி பயணிகள் ரயிலின் ஆறு பெட்டிகள் கடலில் கவிழ்ந்தது. புயலின் தாக்கத்தால் என்ன நடக்கிறது என்பதை கூட ரயில்வே அதிகாரிகளால் கண்காணிக்க முடியவில்லை.
கடுமையான புயலின் ருத்ரதாண்டவம் காலையில் ஓய்ந்த பிறகு, ராமேஸ்வரம் சாலைகளில் பரவியிருந்த ஒரு பெரிய நீர் அடுக்கைத் தவிர வேறு எதையும் ஊழியர்களால் பார்க்க முடியவில்லை. ரயில் பயணிகளின் இறப்புகளின் துல்லியமான எண்ணிக்கை தெரியவில்லை என்றாலும், ரயிலில் 100 முதல் 110 பயணிகள் மற்றும் 18 ரயில்வே ஊழியர்கள் இருந்ததாகவும், அவர்கள் அனைவரும் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. சில மதிப்பீடுகள் இந்த எண்ணிக்கை 200 வரை இருக்கலாம் என்று கூறுகின்றன. பழைய பாம்பன் பாலம் சுனாமியைத் தாங்கியிருந்தாலும், அது கடுமையாக சேதமடைந்தது. மேலும் பாலத்தின் இரண்டு தூண்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. தொடர்ந்து, அது மீண்டும் மறுசீரமைக்கப்பட்டது.