சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு, தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சசிகலா சட்டசபை தேர்தலின்போது அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்தார். இதையடுத்து, சமீபகாலமாக சசிகலா தனது ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்களுடன் தொலைபேசியில் பேசும் ஆடியோக்கள் வைரலாகி வருகிறது.

Continues below advertisement

இந்த நிலையில், சசிகலா சமீபத்தில் ஈரோட்டைச் சேர்ந்த சிதம்பரம் என்ற தனது ஆதரவாளரிடம் தொலைபேசியில் பேசியுள்ளார். அப்போது, அவர் பேசியதாவது,

“கொரோனா தாக்கம் முழுமையாக ஓயட்டும். கட்டாயம் நான் வந்துடுவேன். கட்சியே இப்போ வேற மாதிரி போயிகிட்டு இருக்கு. விரைவில் வந்த இந்த கட்சியை காப்பாற்றுவேன். அம்மா இருக்கும்போது நம்ம கட்சி நாட்டிலேயே 3-வது பெரிய கட்சினு நமக்கு அந்தஸ்து கிடைச்சது. ஆனா இன்னைக்கு நம்ம எம்.பி.க்களை நாமே இழந்திருக்கிறோம். இருந்த எம்.பி.க்களையும் அவங்களோட தவறான முடிவுகளால் வேற கட்சிகளுக்கு தாரை வார்த்திருக்கிறோம். எந்த பிரச்சினையும் ஏற்படாம என்னோட தலைமையில் இருந்திருந்தால் ஆட்சியை நிச்சயம் அமைத்திருக்கலாம்” என்று பேசியுள்ளார். மேலும், சேலம் ஆத்தூரைச் சேர்ந்த தனது ஆதரவாளர் சுந்தரம் என்பவரிடம் சசிகலா பேசும்போது,” சேலத்தில் கட்சியினர் தன்னிச்சையான போக்கில் செயல்படுகிறார்கள். கட்சி தொண்டர்கள் கவலைப்படாமல் இருங்கள். நான் வந்து எல்லாத்தையும் சரி பண்ணிட்றேன்.” இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

Continues below advertisement

சசிகலாவுடன் தொடர்பு கொள்பவர்கள் கட்சியின் கொள்கைகளுக்கும், விதிகளுக்கும் முரணாக செயல்படுபவர்களாக கருதி கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று ஏற்கனவே கட்சித் தலைமை எச்சரித்திருந்தது. இந்த நிலையில், சசிகலாவுடன் தொலைபேசியில் பேசியதற்காக கட்சி நிர்வாகிகள் 5 பேரை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீ்ரசெல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து உத்தரவிட்டுள்ளனர்.

இதுதொடர்பாக, அவர்கள் வெளியிட்ட அறிவிப்பில், “ அ.தி.மு.க.வின் கொள்கை, குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சி கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினால் சேலம் புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட மாணவரணி இணைச் செயலாளர் ராமகிருஷ்ணன், சிவகங்கை மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச்செயலாளர் சரவணன், மாவட்ட மகளிரணி இணைச்செயலாளர் சண்முகப்பிரியா, நெல்லை மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற முன்னாள் இணைச்செயலாளர் திம்மராஜபுரம் ராஜகோபால், தச்சநல்லூர் பகுதி மாணவரணி இணைச்செயலாளர் சுந்தர்ராஜ் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார்கள்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சசிகலா பேசும் ஆடியோக்கள் தொடர்ந்து வெளியாகி வருவது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.