சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியான நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளிப்படையாக பேசியுள்ளார்.
சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணத்தில் அரசியல்வாதி ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக அவரின் கணவர் ஹேம்நாத் புகார் கூறிய நிலையில், இந்த வழக்கில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஒருவருக்கு தொடர்பு இருப்பதாகவும், அவரிடம் போலீசார் விசாரிக்க திட்டமிட்டுருப்பதாகவும் தகவல் வெளியானது. அந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ யார்..? அல்லது அவர் முன்னாள் அமைச்சரா இருப்பாரோ என்று சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் விவாதித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகை சித்ரா தற்கொலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படும் விவகாரத்தில் மறு விசாரணை நடத்த எந்த பிரச்னையும் இல்லை என்றும், மடியில் கனம் இல்லை, அதனால் வழியில் பயம் இல்லை எனவும் கூறிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், உண்மையான குற்றவாளிகளை காவல்துறையினர் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மறுபடியும் சூடுபிடித்த நடிகை சித்ரா வழக்கு
நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் அரசியல் பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதாக அப்போதைய விசாரணையில் தெரியவந்தது. அவர் தற்கொலை செய்து கொண்ட நேரத்தில் அப்போதைய ஆளுங்கட்சியை சேர்ந்த ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியான நிலையில், இந்த வழக்கை கிடப்பில் போட்டனர். தற்போது சித்ராவின் கணவர் ஹேம்நாத் போலீஸ் கமிஷனரிடம் கொடுத்த புகாரை தொடர்ந்து, இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
சித்ரா தற்கொலை செய்வதற்கு முன்பு, பெரம்பலூரில் ஒரு கடை திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இதனைத்தொடர்ந்து, அப்போதைய அதிமுக எம்எல்ஏ ஒருவர் தொடர்ந்து கொடுத்த தொந்தரவின் காரணமாக தற்கொலை என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது.
தற்போது ஆட்சி மாறியதால், முன்னாள் எம்எல்ஏவை விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளதாகவும், தற்போதைய அரசு இந்த வழக்கை விசாரிக்க முழு சுதந்திரம் கொடுத்ததும் இந்த வழக்கு மீண்டும் சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்