சிப்காட் அமைக்க வேளாண் பல்கலைக்கழகம் மண்டல கரிசல் மண் ஆராய்ச்சி நிலையத்திற்கான நிலங்களை கைப்பற்றுவது ஏன்? கைவிட மறுத்தால் கருப்பு கொடி காட்டப்படும்.  - பி.ஆர்.பாண்டியன் கண்டனம்.

வேளாண் மண்டல ஆராய்ச்சிநிலையம்
 
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தனது அறிக்கையில்..,” விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கோவை வேளாண் பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான மண்டல ஆராய்ச்சி நிலையம் சுமார் 202 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. 1981இல் அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர் இதற்கான அனுமதி கொடுத்துள்ளார். 202 ஏக்கர் விளை நிலங்களையும் பல்கலைக்கழகம் தனது சொந்த நிதியிலிருந்து விவசாயிகளிடம் விலை கொடுத்து வாங்கி ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. இது முற்றிலும் வேளாண் பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான இடமாகும். இங்கு மகாராஷ்டிரா, ராஜஸ்தான் போன்ற வட மாவட்டங்களில் வறட்சி பகுதிகளில் நீரின்றி மருத்துவ குணம் கொண்ட பயிர் வகைகள் சாகுபடி செய்யப்படுகிறது. பழ வகைகள், நெல், திணை, நிலக்கடலை, உள்ளிட்ட பணப் பயிர்களை பயிரிட்டு ஆய்வு செய்து வெற்றி கண்டு வருகின்றனர்.
 
வறண்ட பகுதியில் இந்த பயிர்கள் சாகுபடி 
 
மிக சிறப்பாக இங்கு ஆராய்ச்சி நடப்பதோடு விளைவிக்கக் கூடிய பயிர் வகைகள் மிகப்பெரிய வருவாயை ஈட்டக் கூடிய வகையில் உள்ளது. ஒட்டுமொத்தமாக தண்ணீர் இன்றி வறண்ட பகுதியில் இந்த பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக இதனை ஒட்டி இருக்கிற சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, வரையிலும்  விளை நிலங்கள் தரிசாக கிடைக்கிறது. இங்கே ஆய்வு செய்து கண்டுபிடிக்கப்படும் பயிர் வகைகளை தரிசு நிலங்களில் சாகுபடி செய்வதற்கான பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகிறது.
 
அமைச்சரின் சுயலாபம்
 
இவ்வாறான புகழ்மிக்க மண்டல ஆராய்ச்சி மையத்தை கையகப்படுத்தி பண்ணையை அகற்றிவிட்டு பண்ணைக்குப் பின்புறம் சுமார் 500 ஏக்கர் நிலங்கள் விலை கொடுத்து வாங்கப்பட்டுள்ளதாகவும், அந்த இடத்தில் சிப்காட் அமைக்கப்பட்ட வேண்டும் என்கிற சுய நலநோக்கத்தோடு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதே நேரத்தில் மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலயில் சாலையில் வலது பக்கம் ஆராய்ச்சி மையம் அமைந்துள்ளது. மண்டல ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள கிராமத்திற்கு அருகே தமிழ்நாடு அரசின் வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரனுக்கு சொந்த கிராமம் அமைந்துள்ளது. ஆராய்ச்சி மையத்தை  சுற்றி இருக்கிற அனைத்து நிலங்களும் அமைச்சர் குடும்பத்திற்கு சொந்தமானதாகும். எனவே வேளாண்மைக்கான ஆராய்ச்சி மைய நிலத்தையும் கைப்பற்றி விட்டால் ஒட்டுமொத்தமாக சிப்காட் என்கிற பெயரில் தனது சுயநலத்திற்காக அமைச்சர் இவ்வாறு செயல்படுகிறார் என்று விவசாயிகள் குற்றம் சாட்டுகிறார்கள்.
 
அனுமதிக்க மாட்டோம். 
 
நேற்று முன்தினம் இப்பகுதியை நான் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து அதிர்ச்சி அடைந்தேன். 129 ஏக்கர் கையகப்படுத்துவதற்கு முதலில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வந்த நிலையில் நேற்றைய முன் தினம் (31.07.2025) எனது தலைமையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்பாட்டம் நடத்தினோம். பிறகு மாவட்ட ஆட்சியருடனும் பேச்சுவார்த்தை நடத்தினோம். மாற்று இடத்தை கைப்பற்றி எந்த விதத்திலும் பண்ணைக்கு பாதிப்பு இல்லாத வகையில் சிப்காட் அமைப்பதை நாங்கள் எதிர்க்கவில்லை என எடுத்துரைத்தோம். ஆட்சியரும் அமைச்சர், அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று பரிசீலிப்பதாக உறுதியளித்தார். தற்போது நேற்று முதல் ஆராய்ச்சி நிலையத்திற்கு சொந்தமான ஒரு பகுதியில் கார்பன் கிரெடிட் உற்பத்தி செய்யக்கூடிய இடத்தில் 50 அடி அகலத்தில் சாலை அமைக்க கைப்பற்றுவதற்கு முயற்சிப்பதை அனுமதிக்க மாட்டோம். 
 
கருப்புக் கொடி
 
அவ்வாறு சாலைக்கு திட்டமிடும் இடத்திற்கு அருகில் நெடுஞ்சாலை துவங்கி இருக்கின்ற இடங்கள் முழுமையும் அமைச்சரது சகோதரர் மற்றும் குடும்பத்திற்கு சொந்தமான நிலங்கள் என விவசாயிகள் உறுதி செய்கின்றனர். எனவே ஆராய்ச்சி நிலையத்தை முழுமையாக கைவிடுவதோடு, சுயநலத்தையும் கைவிட்டு அவரது குடும்பத்திற்கு சொந்தமான நிலங்கள் வழியே சாலைகள் அமைத்து சிப்காட் அமைத்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்க முன்னர் வேண்டும். ஒரு குழி இடம் கூட வேளாண் ஆராய்ச்சி மையத்திற்கு சொந்தமான இடத்தை கைப்பற்ற கூடாது. மீறி கைப்பற்றினால் அமைப்போம் என்று முடிவெடுத்தால் முதலமைச்சர் தென் மாவட்டங்கள்  வரும்போது கருப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வேண்டிய நெருக்கடியை உருவாக்கக் கூடாது” என தெரிவித்துள்ளார்.