வெறிநோய் தடுப்பூசி சிறப்பு முகாம் பணிக்கு விலங்குகள் நல ஆர்வலர்கள், கால்நடை தனியார் மருத்துவர்கள் தொடர்பு கொள்ளலாம்.

தெருநாய்களுக்கு ரேபிஸ்
 
கொரோனா பெருந்தொற்றிற்கு பிறகு தெருநாய்களின் தொல்லை அதிகளவு உள்ளதாக புள்ளி விவரங்கள் சொல்கிறது. தாங்கள் விரும்பும் செல்லப் பிராணிகளை வளர்க்கும் நபர்கள், அதனை தொடர்ந்து கவனிக்க முடியாமல் தெருக்களிலும், காட்டுப் பகுதிகளிலும் விட்டுச் செல்கின்றனர். இப்படியாக தெருநாய்கள் அதிகரித்து பொதுமக்களுக்கு தொல்லை கொடுப்பதாக கால்நடை பராமரிப்புத்துறையினர் கருதுகின்றனர். இந்த சூழ்நிலையில் நாய் இனப்பெருக்கம் செய்து தற்போது தெருக்களை ஆக்கிரமித்து ஆட்சி செய்கிறது. இதைக் கடந்து வீட்டிற்கு செல்வது மிகப்பெரும் சவாலாக அமைகிறது. இதில் எந்த நாய்க்கு ரேபிஸ் தொற்று இருக்கும் என்று யூகிக்க முடியாத அளவிற்கு பொதுமக்கள் அஞ்சி பதற்றத்துடன் வீடு சென்று நிம்மதி அடைகின்றனர். இப்படியான சூழ்நிலையை தான் நாள்தோறும் அவர்கள் அனுபவித்து வருகின்றனர்.
 
மதுரை மாநகராட்சி பகுதிகளில் நாய் தொல்லை
 
சமீபத்தில் சமூக ஆர்வலர்கள் ஜெயராஜ் - மூர்த்தி சகோதர்கள் தங்ளது புகார் ஒன்றில் கூறுகையில், “மதுரை மாநகராட்சி வார்டு 72க்கு உட்பட்ட சந்தான முருகன் நகர் 2 வது தெரு, EB காலனி விரிவாக்கம், பைக்கரா பகுதியில் நாய்களின் அச்சுறுத்தல் அதிகமாக உள்ளது. 20 முதல் 30 நாய்கள் பகல் மற்றும் இரவு நேரங்களில் சாலையில் செல்வோரை நிம்மதியாக செல்ல விடுவதில்லை. இதனால் ரேபிஸ் தொற்று தாக்குதல் ஏற்படும் அபாயம் உள்ளது. நாய் அச்சுறுத்தல் பொது மக்களிடம் மிகவும் அதிர்ச்சியை தருகிறது.  தயவு செய்து நாய்களை பிடித்து சென்று மக்களுக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவித்திருந்தனர். இந்த சூழலில் மதுரையில் வெறிநோய் தடுப்பூசி சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.
 
வெறிநோய் தடுப்பூசி சிறப்பு முகாம்
 
மதுரை மாநகராட்சி ஐந்து மண்டலத்திற்கு உட்பட்ட 100 வார்டுப் பகுதிகளில் தெருக்களில் சுற்றித்திரியும் தெருநாய்களால் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் போக்குவரத்து இடையூறு மற்றும் விபத்துகள், மக்களின் உயிரை பறிக்கும் அபாயகரமான நிலை, நாயால் மனிதர்கள் கடிபடுவதை தடுக்கும் பொருட்டு ரேபிஸ் நோய் தடுப்பு நடவடிக்கை பணி வெறிநோய் தடுப்பூசி சிறப்பு முகாம் கடந்த 21.07.2025 முதல் நடைபெற்று வருகிறது.
 
ஆர்வமுள்ள நபர்களுக்கு வரவேற்பு
 
மேலும் இப்பணியினை சிறப்பாக மேற்கொள்ள விலங்கு நல ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வம் விருப்பமுள்ள தனியார் கால்நடை மருத்துவர்கள் தடுப்பூசி போடவும் மற்றும் இப்பணிக்குரிய தேவையான வசதிகள் செய்து தர விருப்பம் உள்ளவர்கள் இச்சிறப்பு பணிக்கு உதவிட மதுரை மாநகராட்சி கால்நடை மருத்துவர் கைபேசி எண் -9498748935 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப் படுகிறது. வெறிநோய் தடுப்பூசி சிறப்பு முகாம் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெற இருக்கிறது.
 
மண்டலம் (எண்1-ல்) வார்டு நம்பர் 3-ல் ஆனையூர் பகுதியில் 13.08.2025 முதல் 20.08.2025 வரை நடைபெறும்.
 
மண்டலம் (எண்1-ல்) வார்டு நம்பர் 8-ல் கண்ணனேந்தல்  பகுதியில் 21.08.2025 முதல் 26.08.2025 வரை நடைபெறும்.
 
மண்டலம் (எண்2-ல்) வார்டு நம்பர் 22-ல் தத்தனேரி பகுதியில் 28.08.2025 முதல் 02.09.2025 வரை நடைபெறும்.
 
மண்டலம் (எண் 3-ல்) வார்டு நம்பர் 59-ல் இரயில்வே காலனி - மகபூப்பாளையம் பகுதியில் 03.09.2025 முதல் 09.09.2025 வரை நடைபெறும்.
 
மண்டலம் (எண்4-ல்) வார்டு நம்பர் 89-ல் சிந்தாமணி - அனுப்பானடி பகுதியில் 09.09.2025 முதல் 13.09.2025 வரை நடைபெறும்.
 
மண்டலம் (எண்5-ல்) வார்டு நம்பர் 99-ல் திருப்பரங்குன்றம் பகுதியில் 15.09.2025 முதல் 19.09.2025 வரை நடைபெறும்.
 
மண்டலம் (எண்5-ல்) வார்டு நம்பர் 100-ல் அவனியாபுரம் பகுதியில் 01.08.2025 முதல் 06.08.2025 வரை நடைபெறும்.
 
மண்டலம் (எண்5-ல்) வார்டு நம்பர் 73 -ல் அழகப்பாநகர், முத்துப்பட்டி பகுதியில் 07.08.2025 முதல் 12.08.2025 வரை நடைபெறும், எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.