Virudhunagar Fire Accident: விருதுநகரை அடுத்த வெம்பக்கோட்டை அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூபாய் 3 லட்சம் நிதி உதவி வழங்கியுள்ளார். அதேபோல் காயம் அடைந்தவர்கள் குடும்பத்தினருக்கு ரூபாய் ஒரு லட்சம் நிதி உதவி வழங்கியுள்ளார். மேலும் இந்த விபத்து தொடர்பாக வட்டாச்சியர் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு விபத்துக்கான காரணம் கண்டறியப்படும் எனவும் சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர், சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலைகளில் அடிக்கடி வெடி விபத்துகள் ஏற்படுகின்றது. இந்த விபத்துக்களால் ஏராளமானோர் உயிரிழக்க நேரிடுகிறது. இந்த நிலையில், தற்போது ஒரு வெடி விபத்து ஏற்பட்டிருக்கிறது.
பட்டாசு ஆலையில் வெடி விபத்து:
விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்த வெம்பகோட்டை அருகே சிவகாசியை சேர்ந்த விக்னேஷ் (45) என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. நாக்பூர் உரிமம் பெற்ற இந்த பட்டாசு தொழிற்சாலையில் 55 அறைகளில் 150க்கும் மேற்பட்ட பட்டாசு தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது பட்டாசு தயாரிக்க தேவையான மருந்து கலவையில் ஏற்பட்ட உராய்வின் காரணமாக திடீரென வெடித்து சிதறியதில் 5-அறைகள் தரைமட்டமாகின.
10 பேர் பரிதாபமாக உயிரிழப்பு:
இந்த வெடிவிபத்தில் அங்கு பணியில் இருந்த தொழிலாளர்கள் உட்பட 10 பேர் உடல் கருகிய நிலையில் உயிரிழந்துள்ளனர். 4 ஆண்கள், 6 பெண்கள் என 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 4 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு சிவகாசி மற்றும் கல்லமநாயக்கன்பட்டி அரசு மருத்துவமனைகளில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் அறிந்த சிவகாசி, வெம்பகோட்டை மற்றும் ஏழாயிரம்பண்ணை தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்து குறித்து ஆலங்குளம் போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்தவர்கள் ரமேஷ் (26), கருப்பசாமி (29), அம்பிகா ( 30), முருகஜோதி (50), முத்து (45), சாந்தா ( 35), குருசாமி (50) ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க
இந்தியா கூட்டணி வெற்றி பெறும் நாளே இந்தியா வெற்றி அடையும் நாளாகும் - கனிமொழி எம்பி பேச்சு