North Chennai Lok Sabha Constituency: வடசென்னை மக்களவை தொகுதியின் தேர்தல் வரலாறு கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 2024:
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், கடந்த ஆண்டு இறுதியில் இருந்தே தேசிய கட்சிகள் தொடங்கி, லெட்டர் பேட் கட்சிகள் வரை அனைத்துமே தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில், எதில் எந்த கட்சி அதிகம் ஆதிக்கம் செலுத்தியுள்ளது, செலுத்தி வருகிறது என்பதை தொகுப்பாக அலசி வருகிறோம். அந்த வகையில் மாநிலத்தின் இரண்டாவது தொகுதியான, வடசென்னை மக்களவைத் தொகுதியின் தேர்தல் வரலாற்றை சற்றே விரிவாக பார்க்கலாம்.
வடசென்னை மக்களவைத் தொகுதி உருவான வரலாறு:
வடசென்னை மக்களவைத் தொகுதி ( North Chennai Lok Sabha constituency) தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள் இரண்டாவது தொகுதி ஆகும். 2008 ஆம் ஆண்டு செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்பிற்கு முன் வட சென்னை மக்களவைத் தொகுதியில், ராயபுரம், துறைமுகம், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர் (தனி), திருவொற்றியூர் மற்றும் வில்லிவாக்கம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன.
மறுசீரமைப்பின்போது பெரம்பூர் பொதுத் தொகுதியாக மாற்றப்பட்டது. வில்லிவாக்கம் பிரிக்கப்பட்டு கொளத்தூர், திரு.வி.க.நகர் (தனி) எனும் சட்டமன்றத் தொகுதிகள் உருவாக்கப்பட்டன. இந்நிலையில் தற்போதுள்ள வடசென்னை தொகுதியில் திருவொற்றியூர், ராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர், கொளத்தூர், திரு.வி.க. நகர் (தனி) மற்றும் ராயபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.
வடசென்னை மக்களவைத் தொகுதி எப்படி?
தமிழ்நாட்டில் உள்ள 32 பொது தொகுதிகளில் வடசென்னையும் ஒன்று. வடசென்னை மக்களவைத் தொகுதியில் தொழிலாளர்கள், மீனவர்கள் மற்றும் தலித்துகள் ஆகியோரின் வாக்குகளே வெற்றியை தீர்மானிப்பவையாக உள்ளன. தமிழக பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும், ஆயிரக்கணக்கான கனரக, நடுத்தர மற்றும் குறு-சிறு தொழிற்சாலைகள் வடசென்னையில் தான் அமைந்துள்ளன. இங்கு நாடார் சமூக வியாபாரிகள் கணிசமாக உள்ளனர். அமைப்புசாரா தொழிலாளர்கள் அதிகம் நிறைந்த தொகுதியாகவும் வடசென்னை உள்ளது. எந்தக் கட்சி வெற்றி பெற வேண்டுமானாலும் அவர்களின் ஆதரவு மிகவும் அவசியமாக உள்ளது.
தொகுதியின் பிரச்னை என்ன?
வடசென்னையை பொறுத்தவரை முக்கிய பிரச்சனையாக போக்குவரத்து நெரிசல் என்பது நெடுங்காலமாக தொடர்கிறது. துர்நாற்றம் வீசும் கொடுங்கையூர் குப்பைக் கிடங்கு, சுத்திக்கரிக்கப்படாத சாக்கடை கழிவுகள், சட்டவிரோதமாகத் திறந்து விடப்படும் ரசாயனக் கழிவுகளால் சீரழிவின் விளிம்பில் உள்ள பக்கிங்காம் கால்வாய் சீரமைக்கபடாதது மற்றும் கடற்கரையில் தொடர்ந்து ரசாயனக் கழிவுகள் கொட்டப்படும் பிரச்னைகள் நீண்ட காலமாக உள்ளன. மழைநீர் வடிகால் பணிகள் இன்னமும் முழுமையடையாததால், கடந்த டிசம்பர் மாதம் பெய்த கனமழையில் கூட வடசென்னை மக்கள் கடும் அவதிக்கு ஆளானது குறிப்பிடத்தக்கது.
வடசென்னை மக்களவைத் தொகுதி தேர்தல் வரலாறு:
மக்களவைத் தேர்தல்களில் திமுகவின் கோட்டையாக விளங்குவது வடசென்னை தொகுதிதான். இதுவரை 11 மக்களவைத் தேர்தல்களில் திமுக இங்கே வெற்றி பெற்றுள்ளது. 2008ம் ஆண்டு நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்பிற்குப் பிறகு, நடைபெற்ற 3 தேர்தல்களிலும் திமுக தான் இரண்டு முறை வெற்றி வாகை சூடியுள்ளது. வடசென்னை மக்களவை தொகுதியில் அடங்கியுள்ள கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் இருந்து தான், தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த மூன்று முறையும் சட்டசபைக்கு தேர்வானது குறிப்பிடத்தக்கது.
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி |
1957 | அந்தோணிப்பிள்ளை | சுயேட்சை |
1962 | சீனிவாசன் | காங்கிரஸ் |
1967 | மனோகரன் | திமுக |
1971 | மனோகரன் | திமுக |
1977 | ஆசைத்தம்பி | திமுக |
1980 | லட்சுமணன் | திமுக |
1984 | சோமு | திமுக |
1989 | பாண்டியன் | காங்கிரஸ் |
1991 | பாண்டியன் | காங்கிரஸ் |
1996 | சோமு | திமுக |
1998 | குப்புசாமி | திமுக |
1999 | குப்புசாமி | திமுக |
2004 | குப்புசாமி | திமுக |
2009 | டி.கே.எஸ். இளங்கோவன் | திமுக |
2014 | வெங்கடேஷ் பாபு | அதிமுக |
2019 | கலாநிதி வீராசாமி | திமுக |
வாக்காளர்கள் விவரம் (2024):
ஆண் வாக்காளர்கள் - 7,24,968
பெண் வாக்காளர்கள் - 7,59,208
மூன்றாம் பாலினத்தவர் - 513
மொத்த வாக்காளர்கள் - 14,84,689
சட்டமன்ற தொகுதிகள் யார் வசம்?
திருவொற்றியூர் - கே.பி. சங்கர் (திமுக)
ராதாகிருஷ்ணன் நகர் - ஜான் எபிநேசர்.ஜே (திமுக)
பெரம்பூர் - ஆர்.டி.சேகர் (திமுக)
கொளத்தூர் - மு.க. ஸ்டாலின் (திமுக)
திரு.வி.க. நகர் (தனி) - பி.சிவகுமார் (திமுக)
ராயபுரம் - மூர்த்தி.ஐட்ரீம் (திமுக)
வடசென்னை எம்.பி., கலாநிதி விராசாமி சாதித்ததும், சறுக்கியதும்?
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றின் முகத்துவாரத்தில் 141 கோடி ரூபாய் செலவில் தூண்டில் வளைவு அமைத்து கொடுத்து பல ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றியுள்ளார். மத்திய அரசின் நிதி உதவியோடு, காசிமேடு மீன்பிடி துறைமுகம் 98 கோடி ரூபாய் செலவில் நவீனமயமாக்கப்பட்டுள்ளது. திருவொற்றியூர் பகுதியில் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியை துவங்க ஒப்புதல் பெற்றுள்ளார்.
அதேநேரம், கொடுங்கையூர் குப்பைமேட்டை அகற்றி சீரமைக்கப்படும் தேர்தல் வாக்குறுதிக்கான பணிகள் தற்போதுதான் தொடங்கியுள்ளன. சென்னை துறைமுகத்திற்கு செல்லும் மணலி சாலை திருவொற்றியூர் சந்திப்புக்கு கடல் வழியாக மேம்பாலம் கட்டுவது, ராயபுரம் ரயில் நிலையத்தை மும்முனை ரயில் நிலையமாக மாற்றுவது, எண்ணூரில் இருந்து துறைமுகம் செல்லும் பறக்கும் சாலை அமைத்தல் மற்றும் தொழிற்சாலைகளால் ஏற்படும் மாசுவை கட்டுப்படுத்தல் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை கலாநிதி வீராசாமி நிறைவேற்றவில்லை.