விருத்தாசலம் அருகே சரியாகப் படிக்கமுடியவில்லை என்று மன உளைச்சலில் இருந்த +2 மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில் கடந்த சில நாட்களாக மாணவி மன உளைச்சலில் இருந்ததாக காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் ஆயியார் மடத்தை சேர்ந்த மாணவி தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இதனிடையே நேற்று பள்ளிக்குச் சென்ற மாணவி, மாதாந்திர தேர்வு எழுதியுள்ளார். தேர்வு எழுதிவிட்டு, பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த மாணவி மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு சுமார் 9 மணி அளவில், வீட்டில் யாரும் இல்லாத போது தனது அறையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த சூழலில் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் மாணவியின் அறைக்கு சென்று பெற்றோர் பார்த்த போது தூக்கிட்டு தற்கொலை செய்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து கதறியுள்ளனர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக விரைந்து சென்று, மாணவியின் உடலை மீட்டு கீழே இறக்கி உள்ளனர். பின்னர் மாணவியை மருத்துவமனைக்கு அழைத்து சென்று போது அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து உடலை அடக்கம் செய்வதற்காக, மாணவியின் பெற்றோர்கள் மற்றும் அவரது உறவினர்கள், இறுதி சடங்கு நிகழ்வுக்கு ஏற்பாடு செய்தனர். இந்நிலையில் இது குறித்து தகவலறிந்து வந்த விருத்தாசலம் காவல் துறையினர், இறுதி சடங்குகாக வைக்கப்பட்டிருந்த மாணவியின் உடலை மீட்டு, உடற் கூராய்வு பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மாணவி முன்பு சிறப்பாக படித்ததாகவும், தற்போது சரியாக படிக்கவில்லை என்று மாணவியின் வீட்டில் சில நாட்களுக்கு முன்பு திட்டியுள்ளனர். மேலும் மகளை ஐஏஎஸ் படிக்க வைக்க வேண்டும் என்ற கனவு மாணவியின் பெற்றோருக்கு இருந்துள்ளது. அதனால் மாணவியின் படிப்பு விஷயத்தில் தொடர்ந்து அழுத்தம் தரப்பட்டதால் சமீபத்தில் நடந்த தேர்வில் தன்னால் சரியாக எழுத முடியவில்லை என்று அருகே உள்ளவர்களிடம் கூறி கவலையுடன் இருந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
மேற்கொண்டு மாணவி தற்கொலை தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாணவி தற்கொலை தொடர்பாக அவர் படித்த பள்ளி தரப்பில் எந்த தொடர் இல்லை என்று காவல் துறை முதற் கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்