விருதுகள், அங்கீகாரத்தில் பிரதிபலிப்பு என்பார்கள். ஆனால், இன்று விருதுகள் பணத்திற்கும், சில சமயம் காரியத்திற்கும் விலை போய்விடுகின்றன. யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும் விருது கொடுக்கலாம். அதில் தவறேதும் இல்லை. ஆனால் அந்த விருதுக்கு ஒரு பெயர் வைத்து, அதை மேன்மையான விருதுகளோடு ஒப்பிடும் போது தான் , சர்சை வெடிக்கிறது.
ஜெயலலிதாவுக்கு தங்கத்தாரகை விருது, புதுச்சேரி ஆளுனர் தமிழிசை மற்றும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்.,க்கு சமுதாய ஆஸ்கர் விருதுகள் வழங்கிய அதே விஜய் பிரபாகர் தான், தற்போது புதிதாக திமுக இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினுக்கும், நடிகர்கள் சூர்யா-ஜோதிகா தம்பதிக்கும் சமுதாய ஆஸ்கர் விருதை அறிவித்திருக்கிறார். யார் இந்த விஜய் பாஸ்கர்? பாஜகவின் என்ஆர்ஐ பிரதிநிதி என்கிறார்கள் அவரை அடையாளப்படுத்துபவர்கள்.
தமிழ்நாட்டின் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி எட்வர்ட் ECP பிரபாகர் என்பவரின் மகனான, மருத்துவர் விஜய் பிரபாகர், அமெரிக்காவில் Multi Ethnic Advisory Task Force எனும் ஒரு அமைப்பை நடத்துகிறார். இந்த அமைப்பின் சார்பில் தான் 'உலகளாவிய சமுதாய ஆஸ்கர் விருது' (குளோபல் கம்யூனிட்டி ஆஸ்கார் விருது) அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கும் அதிகாரப்பூர்வமான 'ஆஸ்கர்' அமைப்புக்கும் எந்த தொடர்பும் கிடையாது.
2019 நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட தமிழிசைக்கு பிரச்சாரம் செய்த விஜய் பிரபாகர், ஒவ்வொரு காலகட்டத்திலும் ,யார் ஆட்சிக்கு வருகிறார்களோ அவர்களுக்கு ஒரு விருது வழங்கி கவுரவித்து, அதன் பேரில் காரியம் சாதிக்கும் ஆசாமி என்றும் குற்றச்சாட்டு உள்ளது. ஜெயலலிதா ஆளுமையாக இருந்த போது, அவருக்கு தங்கத் தாரகை, அதன் பின் சென்ட்ரல் பவருக்காக தமிழிசைக்கு சமுதாய ஆஸ்கர், ஸ்டேட் பவருக்காக ஓபிஎஸ்.,க்கு சமுதாய ஆஸ்கர் என சகிட்டு மேனிக்கு விருதுகளை வீசி வந்த விஜய் பிரபாகர், தற்போது திமுக ஆட்சிக்கு வந்துள்ளதால், அக்கட்சியின் அதிகார மையமாக இருக்கும் உதயநிதிக்கு சமுதாய ஆஸ்கர் விருதை அறிவித்துள்ளார்.
2004ல் ஜெயலலிதாவில் தொடங்கி, 2022 வரை இது தொடர்கிறது. ஒரே ஒரு வித்தியாசம், தங்கத்தாரகை என்பதற்கு பதில் ‛சமுதாய ஆஸ்கர்’ என்று மட்டும் மாற்றியுள்ளனர். மற்றபடி எல்லாம் பழனியப்பன் பாத்திரக்கடை தான் என்கிறார்கள். தற்போது தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு நெருக்கமானவராக காட்டிக் கொண்டுள்ள விஜய் பிரபாகர், புதிய விருதுகள் அறிவிப்பு மூலம், புதிய நட்புக்கு அடித்தளம் போடுகிறார் என்றே தெரிகிறது. தமிழ்நாட்டில் விருதுகள் செய்த கோலம் பல. அவற்றின் உண்மை தன்மை கூட இன்று வரை நமக்கு தெரியாது. அப்படி ஆச்சரியமான விருதுகளை நம் தலைவர்கள் இன்னும் சுமந்துள்ளனர்.
ஜெயலலிதாவுக்கு 'உக்ரைன் நாட்டு' தங்கத்தாரகை, கருணாநிதிக்கு 'ஆஸ்திரியா நாட்டு' ஸ்டாம்ப், விஜயகாந்துக்கு 'புளோரிடா மாகாண' கிறிஸ்தவ மதபோதக டாக்டர் பட்டம், ஸ்டாலினுக்கு 'கென்டகி மாகாண' கென்டகி கர்னல் விருது - என பல விருதுகள் வழங்கப்பட்டு, அவற்றின் உண்மை தன்மையை இதுநாள் வரை யாரும் அறிய முடியவில்லை. இந்நிலையில் தான், உதயநிதி, சூர்யா, ஜோதிகாவுக்கு ''உலகளாவிய சமுதாய ஆஸ்கர் விருது'' எனும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் குறிப்பிடப்பட்ட அனைவருமே ஏதோ ஒரு வகையில் பெயர் பெற்றவர்கள். இவர்களுக்கு விருதுகள் புதிதாக சிறப்பை தருமா என்று தெரியவில்லை. ஆனால், விருதுகளை வைத்து காரியம் சாதிக்க துடிப்போரிடம் சிக்கும் முன் இவர்கள் சிந்திக்க வேண்டும். இல்லையேல்... ஒவ்வொரு ஆண்டும் பழனியப்பன் பாத்திரக்கடை திறந்தே இருக்கும்... புல்லட் பாண்டி பாத்திரத்தோடு வருவார்!