உலக முதலீட்டாளர்கள் மாநாடு இன்னும் சில தினங்களில் நடக்க உள்ளது. இதற்கான செயலில் தமிழக அரசு மும்முரமாக உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
வின்பாஸ்ட்:
பெட்ரோல், டீசல் எரிபொருள் பயன்பாட்டை குறைப்பதற்காக மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க மத்திய மற்றும் மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த சூழலில், மின்சார வாகன தயாரிப்பில் முன்னணி வகிக்கும் வின்பாஸ்ட் நிறுவனத்தை தமிழ்நாட்டில் தொழிற்சாலையை தொடங்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த சூழலில், வின்பாஸ்ட் நிறுவனம் தூத்துக்குடியில் தங்களது நிறுவனத்தை தொடங்க உள்ளது. இதற்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வின்பாஸ்ட் நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
முதலமைச்சர் நன்றி:
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "உலகின் முன்னணி மின்வாகனத் தயாரிப்பு நிறுவனமான வின்பாஸ்ட் தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதை உறுதிசெய்துள்ளது. அனைவரது எதிர்பார்ப்புகளையும் விஞ்சி, 16,000 கோடி ரூபாய் மதிப்பில் தூத்துக்குடியில் மின்சார கார் மற்றும் மின்கலன் உற்பத்தித் தொழிற்சாலையை VinFast நிறுவனம் அமைக்கவுள்ளது. இது வெறும் முதலீடு அல்ல; தென்தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் ஒரு பெரும் பாய்ச்சல்!
தமிழ்நாட்டில் நடைபெறும் நல்லாட்சி மீதும், நம் மாநிலத்தின் ஆற்றல்மிகு மனிதவளத்தின் மீது நம்பிக்கை கொண்டு இந்தப் பெரும் முதலீட்டை மேற்கொள்ளும் வின்பாஸ்ட் நிறுவனத்தாருக்குத் தமிழ்நாட்டின் முதலமைச்சராக எனது மனமார்ந்த நன்றிகள்! #TNGIM2024-இல் இன்னும் இதுபோன்ற பல வியத்தகு சாதனை அறிவிப்புகளைத் தொடர்ந்து எதிர்பார்த்திருங்கள்!" இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.