விநாயகர் சதுர்த்தி அரசு விடுமுறை செப்டம்பர் 17-க்கு பதிலாக செப்டம்பர்- 18 அன்று அறிவிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
2023ஆம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்களின் பட்டியலை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. அதில், விநாயகர் சதுர்த்தி பண்டிகை தவறுதலாக ஒருநாள் முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, விநாயகர் சதுர்த்தி விடுமுறை தேதியை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இந்து சமய அறநிலைய துறை சார்பில் பல்வேறு கோயில்களில் இருந்து பெறப்பட்ட அறிக்கையில், விநாயகர் சதுர்த்தி 18.09.2023 அன்று கொண்டாடப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழ்நாடு அரசு விடுமுறை தேதியை மாற்றி அறிவித்துள்ளது.
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்
வரும் 18-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் முக்கியமானது விநாயகர் சதுர்ததி ஆகும். தமிழ்நாட்டிலும் விநாயகர் சதுர்த்தியை மக்கள் சிறப்பாக கொண்டாடுவார்கள். வட மாநிலங்களில் விநாயகர் சதுர்த்தி 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது.
சிறிய அளவு முதல் பெரியளவு வரை விநாயகர் சிலையை வைத்து வணங்கி அவற்றை கரைப்பது வழக்கமாக உள்ளது. விநாயகர் சதுர்த்தியன்று எவ்வாறு வழிபட வேண்டும்? என்பதை கீழே விரிவாக காணலாம்.
வழிபடுவது எப்படி?
விநாயகர் சதுர்த்தியன்று நாம் வழிபடுவதற்கு தயாராக வீட்டை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். வீட்டை விநாயகர் சதுர்த்திக்கு முந்தைய தினமே சுத்தம் செய்து கொள்வது மிகவும் சிறப்பானது ஆகும்.
அதிகாலையிலே எழுந்து குளித்துவிட வேண்டும். வீட்டின் முன்பு வண்ண கோலமிட வேண்டும், முடிந்தால் வீட்டின் உள்ளே பூஜையறையிலும் கோலமிடுவது உகந்தது.
பின்னர், பூஜையறையில் தலை வாழை இலை போடுங்கள். வாழையிலையின் நுனி வடக்கு பார்த்து இருக்கட்டும். அதன் மீது பச்சரிச்சி பரப்ப வேண்டும். பரப்பிய பச்சரிசி மீது நீங்கள் வாங்கி வந்துள்ள புதிய களிமண் சிலையை வைக்க வேண்டும்.
அந்த களிமண் சிலை மீது சந்தனம், குங்குமம் திலகமிட வேண்டும். புதியதாக வாங்கி வந்த விநாயகர் சிலைக்கு அவருக்கு மிகவும் பிடித்த அருகம்புல், எருக்கம்பூ மாலை போன்றவற்றை அணிவிக்க வேண்டும். இப்போது, மற்றொரு வாழை இலையை விநாயகர் சிலை முன்பு இட வேண்டும்.
வினைகள் தீர்க்கும் விநாயகர்
இலையில் விநாயகர் சதுர்த்திக்காக தயார் செய்து வைத்துள்ள கொழுக்கட்டை, இனிப்பு பலகாரங்கள், பழங்கள், தேங்காய் போன்றவற்றை வைத்து படைக்க வேண்டும். அந்த இலையில் அவல், பொரி, கடலை போன்றவற்றையும் வைக்க வேண்டும். இதையடுத்து, விளக்கேற்றி விநாயகப்பெருமானை மனதார வணங்க வேண்டும்.
விநாயகப் பெருமானை வணங்கினால் நம்மைச் சுற்றியுள்ள வினைகள் அனைத்தும் நீங்கும். விநாயகர் சதுர்த்தியன்று கோயில்களில் கோலாகலமாக இருக்கும் என்பதால் அன்றைய தினம் கோயிலுக்கு சென்று வழிபடுவதும் மிகச்சிறப்பு ஆகும்.
விநாயகர் சிலைகள் பல வண்ணங்களில், பல வடிவங்களில் கிடைக்கும். தற்போது திரைப்படங்களில் வருவதை போல எல்லாம் ( உதாரணத்திற்கு பாகுபலி) போன்ற விநாயகர் சிலைகள் கூட கிடைக்கிறது. ஆனால், நாம் வீட்டிற்கு வாங்கி வணங்கும் விநாயகர் சிலைக்கு என்று சில வரைமுறைகள் உள்ளது. அதாவது, வீட்டிற்கு வாங்கும் விநாயகர் சிலை சிவப்பு நிறத்தில் இருப்பது சிறப்பு ஆகும். விநாயகர் சதுர்த்திக்காக நாம் வாங்கி கரைக்கும் விநாயகர் சிலைகள் களிமண்ணால் செய்யப்பட்டதாக இருந்தால் சுற்றுச்சூழல் மாசுபடாது என்பது குறிப்பிடத்தக்கது.
கெமிக்கல் சேர்க்கப்படாத களிமண் சிலைகளை வாங்குவதால் நாம் சூழல் கேட்டை உருவாக்காமல் இருக்கலாம். பண்டிகையையும் பண்டைய முறைப்படி கொண்டாடலாம். மேலே கூறிய அம்சங்கள் விநாயகர் சிலையை வாங்கும்போது இருக்கிறதா? என்பதை பார்த்து வாங்க வேண்டியது அவசியம் ஆகும். விநாயகர் சிலையை பொறுத்த மட்டில், ஒவ்வொரு வகையான விநாயகர் சிலையும் ஒருவித பலன் அளிக்கக்கூடியது.