விழுப்புரம் : விக்கிரவாண்டி அருகே ஓட்டுனர் துக்க கலத்தில் இயக்கிய சொகுசு பேருந்து பாலத்தின் தடுப்பு கட்டையில் மோதி விபத்துகுள்ளாகி அந்தரத்தில் தொங்கியதில் 23 பயணிகள் லேசான காயமும் 3 பேர் பலத்த காயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக பேருந்துவில் பயணித்தவர்கள் அனைவரும் உயிர்தப்பினர். 

Continues below advertisement

"அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே ஓட்டுநரின் தூக்கக் கலக்கத்தால் கட்டுப்பாட்டை இழந்த தனியார் சொகுசு பேருந்து, பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதி அந்தரத்தில் தொங்கி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் சிக்கிய 26 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

சென்னையிலிருந்து மதுரை நோக்கி தனியார் சொகுசு பேருந்து ஒன்று நேற்று இரவு புறப்பட்டது. இந்தப் பேருந்தில் ஓட்டுநர் உட்பட மொத்தம் 26 பேர் பயணித்தனர். பேருந்து இன்று அதிகாலை விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகேயுள்ள பேரணி என்ற பகுதிக்கு வந்து கொண்டிருந்தது.

Continues below advertisement

அப்போது, பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநர் அரவிந்தன் அதிகாலை நேரத் தூக்கக் கலக்கத்தில் இருந்ததாகத் தெரிகிறது. இதன் காரணமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சங்கராபரணி ஆற்றின் மேம்பாலத்தின் மீது ஏறியபோது, அங்குள்ள பக்கவாட்டு தடுப்புச் சுவரில் (Retaining Wall) மிகப்பலமாக மோதியது.

மோதிய வேகத்தில் பேருந்தின் முன்பகுதி தடுப்புக் கட்டையை உடைத்துக் கொண்டு பாலத்திற்கு வெளியே சென்றது. பேருந்து ஆற்றுக்குள் விழாமல், பாலத்தின் இரும்பு கம்பிகள் மற்றும் சிமெண்ட் கட்டைகளுக்கு இடையே சிக்கி அந்தரத்தில் ஆபத்தான நிலையில் தொங்கியது.

நள்ளிரவு நேரத்தில் உறக்கத்தில் இருந்த பயணிகள், பலத்த சத்தத்தைக் கேட்டு அலறியடித்தபடி எழுந்தனர். பேருந்து சரிந்து ஆற்றுக்குள் விழுந்துவிடுமோ என்ற அச்சத்தில் பயணிகள் அனைவரும் மரண பயத்தில் உறைந்தனர்.

விபத்து குறித்து தகவலறிந்த விக்கிரவாண்டி போலீசார் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பேருந்து நிலையற்று இருந்ததால், முன்பக்க கதவு வழியாக பயணிகளை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, பேருந்தின் பின்பக்கமிருந்த அவசர கால வழி (Emergency Exit) வழியாக பயணிகள் ஒவ்வொருவராகப் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

காயமடைந்தவர்களின் விவரம்: இந்த விபத்தில் ஓட்டுநர் அரவிந்தன், மற்றும் பயணிகள் சக்திமோகன், மகாதேவன் ஆகிய மூன்று பேருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மற்ற 23 பயணிகளுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. காயமடைந்த அனைவரும் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தேசிய நெடுஞ்சாலையின் நடுவே பேருந்து விபத்துக்குள்ளானதால், சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் பல கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் ராட்சத கிரேன் வரவழைக்கப்பட்டு, சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு அந்தரத்தில் தொங்கிய பேருந்தை மீட்டு அப்புறப்படுத்தினர். அதன்பின்னரே போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்பியது.

இச்சம்பவம் குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஓட்டுநரின் கவனக்குறைவே விபத்திற்குக் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பாலத்தில் மோதி பேருந்து அந்தரத்தில் தொங்கிய போதிலும், பெரிய அளவில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படாதது பெரும் ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.