தமிழ்நாட்டில், தேர்தலை எதிர்கொள்ள வேண்டுமென்றால், கூட்டணி வைப்பது அவசியம் என்ற நிலை ஆகிவிட்டது. எம்.ஜி.ஆர், கருணாநிதி காலத்திற்குப் பிறகே, இங்கு கூட்டணி வைத்துதான் அந்த கட்சிகளே ஆட்சியை பிடித்துள்ளதை வரலாறு காட்டுகிறது. அதனால், பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக, கூட்டணி அமைத்தே தேர்தல்களை சந்தித்து வருகின்றன. இந்நிலையில், சமீபத்தில் கட்சி தொடங்கிய விஜய், தனித்தே போட்டி என்பதை தான் கூறி வந்தார். ஆனால், தற்போது கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Continues below advertisement

விஜய் இன்று ஆலோசனை.?

தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணி குறித்து முடிவெடுக்க, தேர்தல் கூட்டணி குழு அமைக்க கட்சியின் தலைவர் முடிவு செய்தள்ளதாக கூறப்படும் நிலையில், அந்த பேச்சுவார்த்தை குழுவை அமைப்பது குறித்து கட்சியின் மூத்த நிர்வாகிகளான செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோருடன் அவர் இன்று ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில், கூட்டணி பேச்சுவார்த்தைக் குழுவில் யார் யாருக்கு இடமளிப்பது என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது. அதன் பின்னர், தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

Continues below advertisement

செங்கோட்டையனை நம்பும் விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தில் சமீபத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், 50 ஆண்டுகால அரசியல் அனுபவம் கொண்டவர். அவரது வரவு, தவெக-விற்கு அதிக பலத்தையும், உற்சாகத்தையும் கொடுத்துள்ளது. இந்நிலையில், தவெக தலைவர் விஜய்யின் பயணத் திட்டங்கள் மற்றும் கூட்டணி பேச்சு வார்த்தை குறித்த அனைத்து பொறுப்புகளும் செங்கோட்டையனிடம் ஒப்படைக்கப்பட்ட உள்ளதாக தகவல்கள்  தெரிவிக்கின்றன.

சமீபத்தில், சொந்த மாவட்டமான ஈரோட்டில் மக்கள் சந்திப்பை மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்து, விஜய்க்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளார் செங்கோட்டையன். இந்த நிலையில், மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தலைமையில், கூட்டணி பேச்சுவார்த்தைக்கான குழு ஒன்றை தவெக அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த குழுவில், கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் இடம் பெற்றுவார்கள் என தெரிகிறது.

நீண்ட அரசியல் அனுபவம் கொண்ட செங்கோட்டையனால், மற்ற கட்சித் தலைவர்களை எளிதில் அணுக முடியும் என்று விஜய் நம்புகிறார். இதனால், அவரது தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி, இன்னும் கூட்டணி குறித்த முடிவுகளை எடுக்காத பாமக, தேமுதிக, அமமுக, புதிய தமிழகம் போன்ற கட்சிகளின் தலைவர்களை சந்தித்து, கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கான அடித்தளத்தை செங்கோட்டையன் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தவெக தலைமையில் ஒரு கூட்டணி மலரும் என தெரிகிறது.

ஜனவரி மாதத்திற்குள் தவெக தலைமையில் கூட்டணி கட்சிகளை இணைக்க செங்கோட்டையன் திட்டமிட்டுள்ளார். ஈரோடு மக்கள் சந்திப்பில் தவெக தலைவர் விஜய்யை முதலமைச்சர் ஆக்குவேன் என செங்கோட்டையன் சபதம் செய்தது குறிப்பிடத்தக்கது.

“பொங்கலுக்குப் பிறகு தவெக-வை பார்த்து நாடே வியக்கும்“

இப்படிப்பட்ட சூழலில், இன்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்த தவெக மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், பொங்கலுக்குப் பிறகு எங்களை பார்த்து நாடே வியக்கும் என்று தெரிவித்துள்ளார்.

“தவழும் குழந்தைகள் தான் பெரியவர் ஆவார்கள், பெரியவரான பின் தான் தன்னாட்சி நடத்துவார்கள். நாங்கள் களத்தில் இருக்கிறோமா இல்லையா என்பது தேர்தல் முடிவு தீர்ப்பளிக்கும். பொங்கல் முடிந்ததற்குப் பிறகு, எங்களுடைய திருப்புமுனையை பார்த்து நாடே வியக்கும்.“ என்று தங்கள் கட்சி மீதான விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம், தற்போது வெளியாகியுள்ள கூட்டணி பேச்சுவார்தைக் குழு குறித்த தகவலை உறுதியாகிறது. அப்படியானால், வரும் நாட்களில் செய்திகளுக்கு பஞ்சமே இருக்காது என்று நம்புவோம்.